அறிஞர் அண்ணாவின் 'செவ்வாழை' - சிறுகதை

செங்­கோ­ட­னின் குழந்­தை­க­ளுக்கு இப்­போது விளை­யாட்டு இடமே செவ்­வாழை இருந்த இடந்­தான்! மல­ரி­டம் மங்­கை­ய­ருக்­கும், தேனி­டம் வண்­டு­க­ளுக்­கும் ஏற்­படும் பிரேமை போல, அந்­தக் குழந்­தை­க­ளுக்­குச் செவ்­வா­ழை­யி­டம் பாசம் ஏற்­பட்டு விட்­டது. செங்­கோடன், அந்­தச் செவ்­வா­ழைக் கன்­றைத் தன் செல்­லப் பிள்ளை போல் வளர்த்து வந்­தான்.

இருட்­டு­கிற நேரம் வீடு திரும்­பி­னா­லும் கூட, வய­லிலே அவன் பட்ட கஷ்­டத்­தைக் கூடப் பொருட்­ப­டுத்­தா­மல், கொல்­லைப்­பு­றம் சென்று, செவ்­வா­ழைக் கன்­றைப் பார்த்­து­விட்டு, தண்­ணீர் போது­மா­ன­படி பாய்ச்­சப்­பட்­டி­ருக்­கி­றதா என்று கவ­னித்து விட்­டுத்­தான், தன் நான்கு குழந்­தை­க­ளி­ட­மும் பேசு­வான். அவ்­வ­ளவு பிரே­மை­யு­டன் அந்­தச் செவ்­வா­ழையை அவன் வளர்த்து வந்­தான். கன்று வளர வளர அவன் களிப்­பும் வளர்ந்­தது. செவ்­வா­ழைக்கு நீர் பாய்ச்­சும் போதும், கல் மண்­ணைக் கிள­றி­வி­டும் போதும், அவன் கண்­கள் பூரிப்­ப­டை­யும்- மகிழ்ச்­சி­யால். கரி­ய­னி­டம் - அவ­னு­டைய முதல் பையன் - காட்­டி­ய­தை­விட அதி­க­மான அன்­பும், அக்­க­றை­யும் காட்­டு­கி­றாரே என்று ஆச்­ச­ரி­யம், சற்­றுப் பொறா­மை­கூட ஏற்­பட்­டது குப்­பிக்கு. “குப்பி! ஏதாச்­சும் மாடு­கீடு வந்து வாழையை மிதிச்­சி­டப் போகுது. ஜாக்­ர­தை­யாக் கவ­னிச்­சுக்கோ.

அரு­மை­யான கன்று - ஆமாம், செவ்­வா­ழைன்னா சாமான்­ய­மில்லே. குலை, எம்­மாம் பெரிசா இருக்­கும் தெரி­யுமோ? பழம், வீச்சு வீச்­சா­க­வும் இருக்­கும், உருண்­டை­யா­க­வும் இருக்­கும்-ரொம்ப ருசி-பழத்­தைக் கண்­ணாலே பார்த்­தாக் கூடப் போதும்; பசி­யா­றிப் போகும்” என்று குப்­பி­யி­டம் பெரு­மை­யா­கப் பேசு­வான் செங்­கோ­டன்.

அப்பா சொல்­லு­வதை நாலு பிள்­ளை­களும் ஆமோ­திப்­பார்­கள் - அது மட்­டுமா - பக்­கத்­துக் குடிசை - எதிர்க் குடி­சை­க­ளிலே உள்ள குழந்­தை­க­ளி­ட­மெல்­லாம், இதே பெரு­மை­யைத்­தான் பேசிக் கொள்­வார்­கள். உழ­வர் வீட்­டுப் பிள்­ளை­கள், வேறே எதைப் பற்­றிப் பேசிக் கொள்ள முடி­யும்?

அப்பா வாங்­கிய புதிய மோட்­டா­ரைப் பற்­றியா, அம்­மா­வின் வைரத்­தோடு பற்­றியா, அண்­ணன் வாங்கி வந்த ரேடி­யோ­வைப் பற்­றியா, எதைப் பற்­றிப் பேச முடி­யும்? செவ்­வா­ழைக் கன்­று­தான், அவர்­க­ளுக்கு, மோட்­டார், ரேடியோ, வைர­மாலை, சக­ல­மும்! மூத்த பயல் கரி­யன், “செவ்­வா­ழைக் குலை தள்­ளி­ய­தும், ஒரு சீப்­புப் பழம் எனக்­குத்­தான்” என்று சொல்­லு­வான்.

“ஒண்­ணுக்­கூட எனக்­குத் தர­மாட்­டா­யாடா - நான் உனக்கு மாம்­ப­ழம் தந்­தி­ருக்­கி­றேன்? கவ­ன­மி­ருக்­கட்­டும் - வறுத்த வேர்க்­க­டலை கொடுத்­தி­ருக்­கி­றேன்; கவ­ன­மி­ருக்­கட்­டும்” என்று எதிர்க் குடிசை எல்­லப்­பன் கூறு­வான்.

கரி­ய­னின் தங்கை, காமாட்­சியோ, கண்­ணைச் சிமிட்­டிக் கொண்டே “உனக்கு ஒரு சீப்­புன்னா, எனக்கு இரண்டு தெரி­யுமா? அம்­மா­வைக் கேட்டு ஒரு சீப்பு, அப்­பா­வைக் கேட்டு ஒரு சீப்பு” என்று குறும்­பா­கப் பேசு­வாள்.

மூன்­ற­வாது பையன் முத்து, “சீப்­புக் கணக்­குப் போட்­டுக்­கிட்டு ஏமாந்து போகா­தீங்க ஆமா - பழ­மா­வ­தற்­குள்ளே யாரார் என்­னென்ன செய்து விடு­வாங்­களோ, யாரு கண்­டாங்க.” என்று சொல்­லு­வான்.வெறும் வேடிக்­கைக்­காக அல்ல, திரு­டி­யா­வது மற்­ற­வர்­க­ளை­விட அதி­கப்­ப­டி­யான பழங்­க­ளைத் தின்றே தீர்த்துவிடு­வது என்று தீர்­மா­னித்தே விட்­டான். செங்­கோ­ட­னின் செல்­லப்பிள்­ளை­யாக வளர்ந்து வந்­தது செவ்­வாழை. உழைப்பு அதி­கம் வய­லில். பண்ணை மானே­ஜ­ரின் ஆர்ப்­பாட்­டம் அதி­கம். இவ்­வ­ள­வை­யும் சகித்­துக்கொள்­வான். செவ்­வா­ழை­யைக் கண்­ட­தும் சக­ல­மும் மறந்­து­போ­கும்.

குழந்­தை­கள் அழு­தால், செவ்­வா­ழை­யைக் காட்­டித்­தான் சமா­தா­னப்­ப­டுத்­து­வான்! துஷ்­டத்­த­னம் செய்­கிற குழந்­தையை மிரட்­ட­வும், செவ்­வா­ழை­யைத்­தான் கவ­னப்­ப­டுத்­து­வான்!

குழந்­தை­கள், பிரி­ய­மா­கச் சாப்­பி­டு­வார்­கள், செவ்­வா­ழையை என்ற எண்­ணம் செங்­கோ­ட­னுக்கு. பண்ணை வீட்­டுப் பிள்­ளை­கள் ஆப்­பிள், திராட்சை தின்ன முடி­கிறது-கரி­ய­னும் முத்­து­வும், எப்­படி விலை உயர்ந்த அந்­தப் பழங்­க­ளைப் பெற முடி­யும்? செவ்­வா­ழை­யைத் தந்து தன் குழந்­தை­க­ளைக் குதூ­க­லிக்­கச் செய்ய வேண்­டும் என்ற எண்­ணந்­தான் செங்­கோ­டனை, அந்­தச் செவ்­வா­ழைக் கன்­றைச் செல்­ல­மாக வளர்க்­கும்­ப­டிச் செய்­தது. உழ­வன் செங்­கோ­ட­னி­டம், எவ்­வ­ளவு பாடு­பட்­டா­லும், குழந்­தை­க­ளுக்­குப் பழ­மும், பட்­ச­ண­மும், வாங்­கித் தரக்­கூ­டிய ‘பணம்’ எப்­ப­டிச் சேர முடி­யும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்­பவே உத­வும்-குப்­பி­யின் ‘பாடு’ குடும்­பத்­தின் பசி­யைப் போக்­கக் கொஞ்­சம் உத­வும். இப்­ப­டிப் பிழைப்பு! பல­னில் மிகப் பெரும் பகு­தியோ, பண்­ணைக்­குச் சேர்ந்து விடு­கிறது. இந்­தச் ‘செவ்­வாழை’ ஒன்­று­தான் அவன் சொந்­த­மாக மொத்­த­மாக பலன் பெறு­வ­தற்கு உத­வக்­கூ­டிய, உழைப்பு!இதிலே பங்கு பெற பண்­ணை­யார் குறுக்­கிட முடி­யா­தல்­லவா? அவ­ருக்­கா­கப் பாடு­பட்ட நேரம் போக, மிச்­ச­மி­ருப்­ப­திலே, அலுத்­துப் படுக்க வேண்­டிய நேரத்­திலே பாடு­பட்டு, கண்­ணைப் போல வளர்த்து வரும் செவ்­வாழை! இதன் முழுப் பய­னும் தன் குடும்­பத்­துக்கு! இது ஒன்­றி­லா­வது தான் பட்ட பாட்­டுக்கு உரிய பல­னைத் தானே பெற முடி­கி­றதே என்று சந்­தோ­ஷம் செங்­கோ­ட­னுக்கு.இவ்­வ­ள­வும் அவன் மன­திலே, தெளி­வா­கத் தோன்­றிய கருத்­து­கள் அல்ல. புகைப்­ப­ட­லம் போல, அந்த எண்­ணம் தோன்­றும், மறை­யும்-செவ்­வா­ழை­யைப் பார்க்­கும்­போது பூரிப்­பு­டன் பெரு­மை­யும் அவன் அடைந்­த­தற்­குக் கார­ணம் இந்த எண்­ணந்­தான். கன்று வளர்ந்­தது கள்­ளங்­க­ப­ட­மின்றி.

செங்­கோ­ட­னுக்­குக் களிப்­பும் வளர்ந்­தது. செங்­கோ­ட­னின் குழந்­தை­க­ளுக்கு இப்­போது விளை­யாட்டு இடமே செவ்­வாழை இருந்த இடந்­தான்!

மல­ரி­டம் மங்­கை­ய­ருக்­கும், தேனி­டம் வண்­டு­க­ளுக்­கும் ஏற்­படும் பிரேமை போல, அந்­தக் குழந்­தை­க­ளுக்­குச் செவ்­வா­ழை­யி­டம் பாசம் ஏற்­பட்டு விட்­டது. “இன்­னும் ஒரு மாசத்­திலே குலை தள்­ளு­மாப்பா?” கரி­யன் கேட்­பான் ஆவ­லு­டன் செங்­கோ­டனை. “இரண்டு மாச­மா­கும்டா கண்ணு” என்று செங்­கோ­டன் பதி­ல­ளிப்­பான். செவ்­வாழை குலை தள்­ளிற்று-செங்­கோ­ட­னின் நடை­யி­லேயே ஒரு புது முறுக்கு ஏற்­பட்டு விட்­டது. நிமிர்ந்து பார்ப்­பான் குலையை பெரு­மை­யு­டன். பண்ணை பரந்­தாம முத­லி­யார், தமது மரு­ம­கப் பெண் முத்து­வி­ஜ­யா­வின் பொன்­னிற மேனியை அழ­கு­ப­டுத்­திய வைர மாலை­யைக் கூட அவ்­வ­ளவு பெரு­மை­யு­டன் பார்த்­தி­ருக்க மாட்­டார்! செங்­கோ­ட­னின் கண்­க­ளுக்கு அந்­தச் செவ்­வா­ழைக் குலை, முத்­து­வி­ஜ­யா­வின் வைர மாலை­யை­விட விலை­ம­திப்­புள்­ள­தா­கத்­தான் தோன்­றிற்று.

குலை முற்­ற­முற்ற செங்­கோ­ட­னின் குழந்­தை­க­ளின் ஆவ­லும், சச்­ச­ர­வும் பங்­குத் தக­ரா­றும், அப்­பா­வி­டமோ அம்­மா­வி­டமோ ‘அப்­பீல்’ செய்­வ­தும் ஓங்கி வள­ர­லா­யிற்று.

“எப்­போது பழ­மா­கும்?” என்று கேட்­பாள் பெண். ‘எத்­தனை நாளைக்கு மரத்­தி­லேயே இருப்­பது?’ என்று கேட்­பான் பையன்.செங்­கோ­டன், பக்­கு­வ­ம­றிந்து குலையை வெட்டி, பத­மா­கப் பழுக்க வைத்­துப் பிள்­ளை­க­ளுக்­குத் தர­வேண்­டு­மென்று எண்­ணிக் கொண்­டி­ருந்­தான். உழைப்­பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகி­றோம-இடையே தர­கர் இல்லை-முக்­காலே மூன்று வீசம் பாகத்­தைப் பறித்­துக் கொள்­ளும் முத­லாளி இல்லை. உழைப்பு நம்­மு­டை­யது என்­றா­லும் உடைமை பண்­ணை­யா­ரு­டை­யது. அவர் எடுத்­துக் கொண்­டது போக மீதம் தானே தனக்கு என்று, வய­லில் விளை­யும் செந்­நெல்­லைப் பற்றி எண்ண வேண்­டும். அது­தானே முறை! ஆனால் இந்­தச் செவ்­வாழை அப்­படி அல்ல! உழைப்­பும் உடை­மை­யும் செங்­கோ­ட­னுக்கே சொந்­தம். இரண்டு நாளை­யில், குலையை வெட்­டி­வி­டத் தீர்­மா­னித்­தான். பிள்­ளை­கள் துள்­ளின சந்­தோ­ஷத்­தால். மற்ற உழ­வர் வீட்­டுப் பிள்­ளை­க­ளி­டம் ‘சேதி’ பறந்­தது. பழம் தர வேண்­டும் என்று சொல்லி, அவலோ, கட­லையோ, கிழங்கோ, மாம்­பிஞ்சோ, எதை எதையோ, ‘அச்­சா­ரம்’ கொடுத்­த­னர் பல குழந்­தை­கள் கரி­ய­னி­டம். பாடு­பட்­டோம், பல­னைப் பெறப் போகி­றோம், இதிலே ஏற்­ப­டு­கிற மகிழ்ச்­சிக்கு ஈடு எது­வும் இல்லை. இதைப் போலவே, வய­லி­லும் நாம் பாடு­ப­டு­வது நமக்கு முழுப்­ப­யன் அளிப்­ப­தாக இருந்­தால் எவ்­வ­ளவு இன்­ப­மாக இருக்­கும்!

செவ்­வா­ழைக்­காக நாம் செல­விட்ட உழைப்பு, பண்­ணை­யா­ரின் நிலத்­துக்­கா­கச் செல­விட்ட உழைப்­பிலே, நூற்­றுக்கு ஒரு பாகம் கூட இராது. ஆனால் உழைப்பு நம்­மு­டை­ய­தா­க­வும் வயல் அவ­ரு­டைய உடை­மை­யா­க­வும் இருந்­த­தால் பலனை அவர் அனு­ப­விக்­கி­றார் பெரும்­ப­குதி. இதோ, இந்­தச் செவ்­வாழை நம்­மக் கொல்­லை­யிலே நாம் உழைத்து வளர்த்­தது. எனவே பலன் நமக்­குக் கிடைக்­கிறது. இது­போல நாம் உழைத்­துப் பிழைக்க நம்­மு­டை­யது என்று ஒரு துண்டு வயல் இருந்­தால், எவ்­வ­ளவு இன்­ப­மாக இருக்­கும். அப்­படி ஒரு காலம் வருமா! உழைப்­ப­வ­னுக்­குத்­தான் நிலம் சொந்­தம். பாடு­ப­டா­த­வன் பண்­ணை­யா­ராக இருக்­கக் கூடாது என்று சொல்­லும் காலம் எப்­போ­தா­வது வருமா என்­றெல்­லாம் கூட, இலே­சா­கச் செங்­கோ­டன் எண்­ணத் தொடங்­கி­னான்.

செவ்­வாழை இது­போன்ற சித்­தாந்­தங்­க­ளைக் கிளறி விட்­டது அவன் மன­தில். குழந்­தை­க­ளுக்கோ நாக்­கிலே நீர் ஊற­லா­யிற்று.

செங்­கோ­டன் செவ்­வா­ழைக் குலை­யைக் கண்டு களித்­தி­ருந்த சம­யம், பண்ணை பரந்­தா­மர், தமது மரு­ம­கப் பெண் முத்­து­வி­ஜ­யத்­தின் பிறந்­த­நாள் விழாவை விம­ரி­சை­யா­கக் கொண்­டாட ஏற்­பா­டு­கள் செய்து கொண்­டி­ருந்­தார்.

அம்­பிகை கோயி­லில் அபி­ஷேக ஆரா­தனை செய்­வ­தற்­காக, ‘ஐய­ரி­டம்’ சொல்லி விட்­டார். கணக்­கப்­பிள்­ளை­யைக் கூப்­பிட்டு, ‘பட்டி’ தயா­ரிக்­கச் சொன்­னார். பல பண்­டங்­க­ளைப் பற்­றிக் குறிப்பு எழு­தும் போது, ‘பழம்’ தேவை என்று தோன்­றா­ம­லி­ருக்­குமா? ‘இரண்டு சீப்பு வாழைப்­ப­ழம்’ என்­றார் பண்­ணை­யார்.

“ஏனுங்க பழம்.. கடை­யிலே நல்ல பழமே இல்லை. பச்சை நாடன்­தான் இருக்கு” என்று இழுத்­தான் சுந்­த­ரம், கணக்­கப்­பிள்ளை. “சரிடா, அதி­லே­தான் இரண்டு சீப்பு வாங்­கேன்? வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!” என்று பண்­ணை­யார் சொல்லி முடிப்­ப­தற்­குள், சுந்­த­ரம், “நம்ம செங்­கோ­டன் கொல்­லை­யிலே, தரமா, ஒரு செவ்­வாழைக் குலை இருக்­கு­துங்க. அதைக் கொண்­டு­கிட்டு வர­லாம்,” என்­றான். “சரி” என்­றார் பண்­ணை­யார். செங்­கோ­ட­னின் செவ்­வா­ழைக் குலை! அவ­னு­டைய இன்­பக் கனவு!! உழைப்­பின் விளைவு!! குழந்­தை­க­ளின் குதூ­க­லம்!! அதற்கு மரண ஓலை தயா­ரித்து விட்­டான் சுந்­த­ரம்! எத்­த­னையோ பகல் பார்த்­துப் பார்த்து, செங்­கோ­ட­னின் குடும்­பம் பூரா­வும் பூரித்­தது அந்­தக் குலையை! அதற்­குக் கொலைகா­ர­னான் சுந்­த­ரம்.

மகிழ்ச்சி, பெருமை, நம்­பிக்கை இவற்றைத் தந்து வந்த, அந்­தச் செவ்­வா­ழைக் குலைக்கு வந்­தது ஆபத்து.

தெரு­விலே, சுந்­த­ர­மும் செங்­கோ­ட­னும் பேசும்­போது குழந்­தை­கள், செவ்­வா­ழை­யைப் பற்­றி­ய­தாக இருக்­கும் என்று எண்­ணவே இல்லை!

செங்­கோ­ட­னுக்­குத் தலை கிறு­கி­று­வென்று சுற்­றிற்று. நாக்­குக் குழ­றிற்று, வார்த்­தை­கள் குபு­கு­பு­வென்று கிளம்பி, தொண்­டை­யில் சிக்­கிக் கொண்­டன. மாட்­டுப் பெண்­ணுக்குப் பிறந்த நாள் பூஜை என்று கார­ணம் காட்­டி­னான் சுந்­த­ரம். என்ன செய்­வான் செங்­கோடன்! என்ன சொல்­வான்?

அவன் உள்­ளத்­திலே, வாழை­யோடு சேர்ந்து வளர்ந்த ஆசை; அவன் குழந்­தை­க­ளின் நாக்­கில் நீர் ஊறச்­செய்த ஆசை; இன்று, நாளை, என்று நாள் பார்த்­துக் கொண்­டி­ருந்த ஆவல் எனும் எதைத்­தான் சொல்ல முடி­யும்? கேட்­ப­வர் பண்ணை பரந்­தா­மர்! எவ்­வ­ளவு அல்­ப­னடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்­டாக மதித்­துக் கேட்­ட­னுப்­பி­னால் முடி­யாது என்று சொல்லி விட்­டாயே! அவ­ரு­டைய உப்­பைத் தின்று பிழைக்­கி­ற­வ­னுக்கு இவ்­வ­ளவு நன்றி கெட்­ட­த­னமா? கேவ­லம், ஒரு வாழைக்­குலை! அவ­ரு­டைய அந்­தஸ்­துக்கு இது ஒரு பிர­மா­தமா! என்று ஊர் ஏசு­கிறது போல் அவன் கண்­க­ளுக்­குத் தெரி­கிறது.

‘அப்பா! ஆசை காட்டி மோசம் செய்­யாதே! நான் கூடத்­தான் தண்­ணீர் பாய்ச்­சி­னேன். மாடு மிதித்து விடா­த­படி பாது­காத்­தேன். செவ்­வாழை ரொம்ப ருசி­யாக இருக்­கும். கல்­கண்டு போல இருக்­கும் என்று நீதானே என்­னி­டம் சொன்­னாய்.

“அப்பா! தங்­கச்­சிக்­குக்கூட, ‘உசிர்’ அந்­தப் பழத்­தி­டம். மரத்தை அண்­ணாந்து பார்க்­கும்­போதே, நாக்­கிலே நீர் ஊறும். எங்­க­ளுக்­குத் தரு­வ­தா­கச் சொல்­லி­விட்டு, இப்­பொ­ழுது ஏமாற்­று­கி­றாயே. நாங்­கள் என்­னப்பா, உன்னை கடை­யிலே காசு போட்­டுத் திராட்சை, கம­லாவா வாங்­கித் தரச் சொன்­னோம்.

“நம்ம கொல்­லை­யிலே நாம் வளர்த்­த­தல்­லவா!” என்று அழு­கு­ர­லு­டன் கேட்­கும் குழந்­தை­களும், ‘குழந்­தை­க­ளைத் தவிக்­கச் செய்­கி­றாயே, நியா­யமா?” என்று கோபத்­து­டன் கேட்­கும் மனை­வி­யும், அவன் மனக்­கண்­க­ளுக்­குத் தெரிந்­த­னர்!

எதிரே நின்­ற­வரோ, பண்­ணைக் கணக்­கப்­பிள்ளை! அரி­வாள் இருக்கு­மி­டம் சென்­றான்.

‘அப்பா, குலையை வெட்­டப் போறாரு, செவ்­வா­ழைக்­குலை’ என்று ஆனந்­தக் கூச்­ச­லிட்­டுக் கொண்டு, குழந்­தை­கள் கூத்­தா­டின. செங்­கோ­ட­னின் கண்­க­ளிலே நீர்த்­து­ளி­கள் கிளம்­பின!

குலையை வெட்­டி­னான். உள்ளே கொண்டு வந்­தான். அரி­வா­ளைக் கீழே போட்­டான். “குலை­யைக் கீழே வை அப்பா, தொட்­டுப் பார்க்­க­லாம்,” என்று குதித்­தன குழந்­தை­கள். கரி­ய­னின் முது­கைத் தட­வி­னான் செங்­கோ­டன்.

“கண்ணு! இந்­தக் குலை, நம்ம ஆண்­டைக்கு வேணு­மாம் கொண்டு போகி­றேன், அழா­தீங்க. இன்­னும் ஒரு மாசத்­திலே, பக்­கத்­துக் கண்ணு மர­மா­கிக் குலை தள்­ளும். அத உங்­க­ளுக்­குக் கட்­டா­ய­மா­கக் கொடுத்து விட­றேன்,” என்று கூறிக்­கொண்டே, வீட்டை விட்­டுக் கிளம்­பி­னான், குழந்­தை­யின் அழு­கு­ரல் மன­தைப் பிளப்­ப­தற்­குள்.செங்­கோ­டன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலா­யிற்று.

இரவு நெடு­நே­ரத்­திற்­குப் பிற­கு­தான் செங்­கோ­ட­னுக்­குத் துணிவு பிறந்­தது வீட்­டுக்கு வர! அழுது அலுத்­துத் தூங்­கி­விட்ட குழந்­தை­க­ளைப் பார்த்­தான்.

அவன் கண்­க­ளிலே, குபு­கு­பு­வெனக் கண்­ணீர் கிளம்­பிற்று. துடைத்­துக்கொண்டு, படுத்­துப் புரண்­டான். அவன் மன­திலே ஆயி­ரம் எண்­ணங்­கள். செவ்­வா­ழையை, செல்­லப்­பிள்­ளை­போல் வளர்த்து என்ன பலன்…! அவ­ருக்கு அது ஒரு பிர­மா­த­மல்ல. ஆயி­ரம் குலை­க­ளை­யும் அவர் நினைத்த மாத்­தி­ரத்­தில் வாங்க முடி­யும்! ஆனால் செங்­கோ­ட­னுக்கு..? அந்த ஒரு குலை­யைக் காண அவன் எவ்­வ­ளவு பாடு­பட்­டான்.

எத்­தனை இரவு அதைப் பற்றி இன்­ப­மான கன­வு­கள். எத்­தனை ஆயி­ரம் தடவை, குழந்­தை­க­ளுக்கு ஆசை காட்­டி­யி­ருப்­பான்! உழைப்பு எவ்­வ­ளவு! அக்­கறை எத்­துணை! எல்­லாம் ஒரு நொடி­யில் அழிந்­தன!

நாலு நாட்­க­ளுக்­குப் பிறகு, வெள்­ளித் தட்­டிலே, ஒரு சீப்பு செவ்­வா­ழைப் பழத்தை வைத்­துக் கொண்டு, அன்­ன­நடை நடந்து அழ­கு­முத்­து­வி­ஜயா அம்­பிகை ஆல­யத்­துக்­குச் சென்­றாள்.

நாலு நாட்­கள் சமா­தா­னம் சொல்­லி­யும், குழந்­தை­க­ளின் குமு­றல் ஓய­வில்லை. கரி­யன் ஒரே பிடி­வா­தம் செய்­தான், ஒரு பழம் வேண்டு­மென்று.

குப்பி, ஒரு கால­ணாவை எடுத்­துக் கொடுத்­த­னுப்­பி­னாள் பழம் வாங்­கிக் கொள்­ளச் சொல்லி. பறந்­தோ­டி­னான் கரி­யன். கடை­யிலே செவ்­வா­ழைச் சீப்பு, அழ­கா­கத் தொங்­கிக் கொண்­டி­ருந்­தது.

கணக்­கப்­பிள்ளை பண்ணை வீட்­டிலே இருந்து நாலு சீப்பை முத­லி­லேயே தீர்த்­து­விட்­டான். அவன் விற்­றான் கடைக்­கா­ர­னுக்கு, அதன் எதிரே, ஏக்­கத்­து­டன் நின்­றான் கரி­யன்!

“பழம், ஒரு அணாடா, பயலே, கால­ணா­வுக்­குச் செவ்­வாழை கிடைக்­குமா... போடா” என்று விரட்­டி­னான், கடைக்­கா­ரன்.

கரி­யன் அறி­வானா, பாபம், தன் கொல்­லை­யிலே இருந்த செவ்­வாழை, இப்­போது கடை­யில் கொலு வீற்­றி­ருக்­கிறது என்ற விந்­தையை! பாபம்! எத்­த­னையோ நாள் அந்­தச் சிறு­வன், தண்­ணீர் பாய்ச்­சி­னான், பழம் கிடைக்­கு­மென்று! பழம் இருக்­கிறது; கரி­ய­னுக்கு எட்­டாத இடத்­தில்! விசா­ரத்­தோடு வீட்­டிற்கு வந்­தான் வறுத்த கட­லையை வாங்­கிக் கொரித்­துக்கொண்டே.

செங்­கோ­டன் கொல்­லைப்­பு­றத்­தி­ல் இருந்து வெளியே வந்­தான் வாழை மரத்­துண்­டு­டன்.

“ஏம்பா! இது­வும் பண்ணை வீட்­டுக்கா?” என்று கேட்­டான் கரி­யன். “இல்­லேடா, கண்ணு! நம்ம பார்­வதி பாட்டி செத்­துப் போயிட்டா, அந்­தப் பாடை­யிலே கட்ட,” என்­றான் செங்­கோ­டன். அலங்­கா­ரப் பாடை­யிலே, செவ்­வா­ழை­யின் துண்டு!

பாடை­யைச் சுற்றி அழு­கு­ரல்! கரி­ய­னும், மற்­றக் குழந்­தை­களும் பின்­பக்­கம். கரி­யன் பெரு­மை­யா­கப் பாடை­யைக் காட்­டிச் சொன்­னான்.

“எங்க வீட்­டுச் செவ்­வா­ழை­யடா” என்று. “எங்க கொல்­லை­யிலே இருந்த செவ்­வா­ழைக் குலை­யைப் பண்ணை வீட்­டுக்­குக் கொடுத்து விட்­டோம். மரத்தை வெட்டி ‘பாடை’யிலே கட்டி விட்­டோம்,” என்­றான் கரி­யன். பாபம் சிறு­வன்­தானே!! அவன் என்ன கண்­டான், செங்­கோ­ட­னின் செவ்­வாழை, தொழி­லா­ளர் உல­கிலே சர்வ சாதா­ர­ணச் சம்­ப­வம் என்­பதை. *


அறிஞர் அண்ணாதுரை

சி.என். அண்ணாதுரை, காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். 1934இல் இளங்கலைப் பட்டப்படிப்பிக்குப்பின் தொடர்ந்து பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் முதுகலைப் பட்டக்கல்வி முடித்துவிட்டு ஆங்கில ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் ஊடகத்துறையிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.

அறிஞர் அண்ணா குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ‘ஹோம் லேண்ட்’, ‘ஹோம் ரூல்’ ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்திய அரசியல் வரை பல துறைகளில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், மேடைப்பேச்சு என பலதுறைகளிலும் அண்ணா சிறந்து விளங்கினார். அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்கள் அவரை நாடக ஆசிரியராகப் புகழ்பெற வைத்தன. அவரது நாடகங்களைக் கண்ட எழுத்தாளர் கல்கி கிரு‌ஷ்ணமூர்த்தி, அவரைத் ‘தென்னாட்டு பெர்னார்ட்‌ஷா’ எனப் புகழ்ந்தார்.

அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமஉரிமை, மாநிலத் தன்னாட்சி போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. அடுக்குமொழி பேசுவதில் தேர்ந்த அண்ணாவின் ஆளுமைமிகு சொற்பொழிவு இளையர்களைப் பெரிதும் ஈர்த்தது.

1967ல் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற அண்ணா, மதராஸ் என்றிருந்த சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு மாநிலம் என்று பெயர் சூட்டுவதற்கும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றுவதற்கும் வழிவகுத்தார்.

“கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்றுதான்”, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டில் அண்ணா இறுதிவரை உறுதியுடன் இருந்தார். மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களைச் சாடினார். தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் தொடர்பான உரிமைகள் முடக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அண்ணா தயங்கியதில்லை.

“பொதுவாழ்வில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்” என்று வலியுறுத்திய அண்ணா, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் மதித்துப் போற்றும் அரசியல் நாகரிகம் மிக்கவர் எனப்போற்றப்படுபவர்.

தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக முதன்முறை பதவியேற்ற அண்ணாவால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடிந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி உயிர்நீத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!