செம்பு

சிறுகதை

கி.சுப்பிரமணியம்

மலாய் இனத்தைச் சேர்ந்­த­வன் சலீம். பார்ப்­ப­தற்கு பரி­தா­ப­மான தோற்­றம் கொண்­ட­வன். பதினான்கு வயதுச் சிறுவனுக்கு இருக்க வேண்­டிய உட­ல­மைப்பு இல்­லாது, மெலிந்து, சற்று கூன் விழுந்த நிலை­யில், விட்டுவிட்டு இரு­மிக்­கொண்டே, தன் செங்­குத்­தாக வானம் பார்த்து நிற்­கும் தலை­மயிரைச் சொறிந்த வண்­ணம் இருப்­பான்.

அவன்­கொண்ட தொடர் இரு­மலால், அவனை, சலீம் டி.பி (காச நோய் சலீம்) என்றே எல்­லோ­ரும் கேலி­யா­க­வும் கேவ­ல­மா­க­வும் கூப்­பிட ஆரம்­பித்­த­னர். பாவம், அவன் தான் என்ன செய்­வான்!

அவன் தந்தை ஒரு போலிஸ்­கா­ரர். எல்­லா­ரா­லும் நன்கு மதிக்­கப்­பட்­ட­வர். சலீ­மின் தாயோ வீட்­டில் இருந்­த­படி சலீ­மை­யும் அவன் இளைய சகோ­த­ரி­க­ளை­யும் காத்து வந்­தாள்.

சலீம் யாரி­ட­மும் அதி­கம் பேச மாட்­டான். திறன் வளர்ச்சி குன்­றி­ய­வன் என்­ப­தால் அவனை பள்­ளிக்­கும் பெற்­றோர் அனுப்­ப­வில்லை.

அவன் வாழ்ந்­தது சிங்­கப்­பூ­ரின் பழைய எஸ்.ஐ.டி குடி­யி­ருப்புப் பகுதி. 1960-ல் பலர் இங்­கு­தான் தாங்­கள் வாழ்ந்த கம்­பத்து வட்­டா­ரத்தை விட்டு இத்­த­கைய புதிய சிமெண்ட் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களுக்கு மெல்ல வந்­த­னர்.

பத்து, ஓர­டுக்கு வீடு­கள் கொண்­டதை ஒரு 'லயன்' என்று அழைத்­த­னர். ஒரு ஐம்­பது லயன்­கள் அப்­பொ­ழுது கட்­டப்­பட்­டி­ருந்­தன.

சலீம் தங்­கி­யி­ருந்த வடக்கு மேட்­டுப் பகுதி வீடு­க­ளின் பின்­பு­றம், காடா­கவே இருந்­தது. அங்கு புதர்­க­ளுக்கு மத்­தி­யில், இரண்­டாம் உல­கப் போரின் போது கட்­டப்­பட்ட கல்­லா­லான பதுங்கு குழி­கள் சிதி­லம் அடைந்த நிலை­யில் இருந்­தன.

இந்­தப் பகு­தி­யில்­தான் சலீம் பொழுதைப் போக்­கிய வண்­ணம் திரிந்து கொண்­டி­ருப்­பான். நண்­பர்­க­ளற்ற அவ­னுக்கு அந்த காடு­தான் எல்­லாம்!

அங்கு காலை­யில் சென்று திரிந்­து­விட்டு, பசி வந்­த­வு­டன் மதி­யம் மெல்ல வீடு திரும்­பு­வான். மதிய உண­விற்­குப்­பின் மீண்­டும் வன­வா­சம்!

அந்த காட்­டில், போரின்­போது, மண்­ணில் புதை­யுண்டு கிடந்த, பழு­த­டைந்த துப்­பாக்கி போன்ற ஆயு­தங்­கள் சில­முறை கண்­டெ­டுக்­கப்­பட்டு, போலி­சி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­னர் அங்கு வசித்­தோர்.

ஆயி­னும் சில உடைந்து சித­றிய சிறிய இரும்பு மற்­றும் செம்பு போன்ற உலோ­கப் பொருட்­கள், அங்கு அவ்­வப்­போது கொஞ்­சம் புதைந்த நிலை­யில் கிடக்­கும்.

சலீம் கண்­க­ளுக்கு இவை பல­முறை தென்­பட்­டுள்­ளது. அப்­படி கண்டு, பொறுக்கி எடுத்து, ஆவ­லு­டன் வீட்­டிற்கு எடுத்­துச் சென்று, மதிய நேரத்­தில் தவ­றா­மல் அங்கு வரும் சீன காராங்­கூனி கிழ­வ­னி­டம், கொஞ்­சம் சில்­லறை காசுக்­காக விற்று விடு­வான். அது­போன்ற தட்­டு­முட்டு பொருட்­களை வாங்­கும் வியா­பா­ரியை அன்று காராங்­கூனி என்றே அழைத்­த­னர்.

பழைய பேப்­பர், பழு­தான ரேடியோ, பாட்­டில்­கள் என்று அவன் வாங்­கும் பட்­டி­யல் நீளும். எனி­னும் செம்­புக்கு நல்ல தொகை கொடுப்­பான். இதன்­பொ­ருட்டே பலர் செம்­பால் செய்­யப்­பட்ட கம்பி போன்­ற­வற்றை மற்ற இடங்­களில் திருடி, இவன் போன்ற காராங்கூனி­யி­டம் விற்­ப­தும் உண்டு. செம்­புக்கு அவ்­வ­ளவு கிராக்கி!

எது எப்­படி இருந்­தா­லும் அந்த காட்­டில் சலீம் அலைந்து திரி­வ­தற்கு இந்த செம்­பும் ஒரு கார­ணம்.

அந்த மேட்­டுப்­ப­கு­தியை சில குடி­யி­ருப்­பா­ளர்­கள் நன்கு பயன்­படுத்­திக்­கொண்­ட­னர். சிறிய காய்­கறி தோட்­டங்­கள் பயி­ரி­டப்­பட்­டன, பலா, கொய்யா போன்ற மரங்­களை நட்டு வளர்த்­த­னர்.

ஒரு பத்து பதி­னைந்து சிறிய கோழிப் பண்­ணை­களும் மெல்ல எழுந்­தன.

பாகார் கம்பி என்று அழைக்­கப்­பட்ட உலோக வேலி­கள் அமைத்து அமை­தி­யு­டன் தங்­க­ளின் சிறிய பண்­ணை­களை காத்­து­வந்­த­னர்.

ஒவ்­வொரு பண்­ணை­யி­லும் சண்டை சேவல்­கள் வளர்த்து வந்­தனர். ஆதலால், மாலை நேரத்­தில் சேவல் சண்டை நடக்க ஆரம்­பித்­தன. இதைப் பார்க்க மிக­வும் ஆவல் கொள்­வான் சலீம். மற்­ற­வர்­கள் கூட்­ட­மாக நின்று சேவல் சண்­டையைப் பார்த்து ஆர்ப்­ப­ரிக்க, கொஞ்­சம் ஒதுங்கி நின்றே ஆட்­டத்தைக் கண்டு ரசிப்­பான். சில சம­யம் மற்­ற­வர் கேலிக்குப் பயந்து அங்­கி­ருக்­கும் மரத்­தில் ஏறி கிளை­களில் அமர்ந்­த­படி சேவல் சண்­டை­யைக் கண்­டு­க­ளிப்­பான்.

"நீ எதற்கு இங்கு வந்து நிற்­கிறாய். போய்­விடு இங்­கி­ருந்து," என்று ஏசி­ய­படி விரட்­டி­னான் டோலா. இப்­ப­டித்­தான் பல­ரா­லும் உதைக்­கப்­பட்ட பந்­து­போல், தின­மும் ஒதுக்­கப்­பட்­டான் சலீம். பதி­லே­தும் கூறாது ஒதுங்­கிக்­கொள்­வான். ஆனா­லும் மற்­ற­வ­ரைக் காட்­டி­லும் அதி­கம் திட்டி விரட்­டு­பவன் இந்த டோலா ஒரு­வன்­தான்.

முப்­பத்­தைந்து வய­தா­கி­யும் இன்­னும் திரு­ம­ண­மா­காது ஊரைச் சுற்­று­ப­வன். அவ­னுக்கு அங்கு வாழ்ந்த பல­ரு­ட­னும் அடிக்­கடி சண்டை வரும். சிலரை அடித்­தும் இருக்­கி­றான். ஆள் கொஞ்­சம் ஒல்­லி­யாக இருந்­தா­லும், உய­ர­மா­க­வும் வலு­வா­க­வும் இருப்­பான். அவனை பலர் ஏசி, சண்­டை­யிட்­டும் அவன் அடங்­கி­ய­தாக இல்லை.

இத்­த­னைக்­கும் தன் மகனை விரட்­டும் விஷ­யம் தெரிந்த சலீ­மின் தந்­தை­யும் டோலாவைக் கண்­டித்து திட்­டி­யும் உள்­ளார்.

இத­னால் அவர் மீதும் சலீம் மீதும் ஆத்­தி­ர­மும் வஞ்­ச­மும் கொண்­டான் டோலா. அவர் போலிஸ்­கா­ரர் என்­ப­தால் கொஞ்­சம் அடங்­கிப் போவ­து­போல் பாவனை காட்டி சில நாள்­க­ளுக்கு அடங்கி நடந்­து­விட்டு மீண்­டும் சலீமை கண்­டால் விரட்­டு­வான்.

சலீமை அவன் வெறுப்­ப­தற்கு முக்­கிய கார­ணம் அங்கு காட்­டில் அவ்­வப்­போது கிடைக்­கும் இந்த செம்­புத் துண்­டு­களே!

என்­ன­தான் டோலா காட்­டில் தேடி­னா­லும், இது­போன்ற செம்­புச் சித­றல்­கள் சலீம் கண்­க­ளுக்­குத்­தான் அதி­கம் தென்­படும்.

கண்­ணில் பட்­டால், ஆவ­லு­டன் பொறுக்கி எடுத்­துக்­கொண்டு வீட்டை நோக்கி ஓடி­வி­டு­வான். இதைக் கண்டு ஏமாற்­ற­மும் வெறுப்­பும் அடை­வான் டோலா.

டோலா செய்த அட்­ட­கா­சம் கொஞ்­ச­நஞ்­சம் அல்ல. மற்­ற­வர்­க­ளைப் பய­மு­றுத்­து­வ­தில் அவ­னுக்கு அப்­படி ஒரு சுகம். அப்­பொ­ழுது, பொந்­தி­யா­னாக் என்ற மலாய் பேய்ப்­ப­டத்தை பல­ரா­லும் திரை­யில் பார்த்து பேசப்­பட்ட நேரம். அந்­தப் படத்­தைப் பார்த்து பயந்­து­போ­யி­னர் பெண்­கள் பலர். இதை நன்­றாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டான் டோலா!

இர­வில் வெள்ளை நிற ஆடையை உடல் முழு­தும் மறைத்த வண்­ணம் ஒவ்­வொரு வீட்­டின் கண்­ணாடி சன்­னல் முன், இரு கைக­ளை­யும் பதித்து அப்­ப­டியே சிறி­து­நே­ரம் நிற்­பான். இதை உள்ளே இருந்து பார்த்த, பெண்­கள் மற்­றும் சிறு­வர்­கள், பயத்­தில் போடும் கூச்­சல் அந்­தச் சுற்று வட்­டா­ரம் எல்­லாம் கேட்­கும். இப்­ப­டியே ஊரைப் பய­முறுத்தி சுகம் கண்­ட­வனை, பிடிக்க சிலர் முயன்ற போதெல்­லாம், 'பேய்' காட்­டிற்­குள் ஓடி­வி­டும்!

சில இளை­யர்­கள் சலீ­மின் தந்­தை­யின் உத­வி­யோடு, திட்­ட­மிட்டு, இர­வில் ஒரு­நாள் காட்­டுக்­குள் ஓடிய 'பேயை' விரட்டிப் பிடித்து உதைத்­த­போ­து­தான், அவர்­கள் சந்­தே­கப்­பட்­ட­து­போல் பேயாக இர­வில் நட­மா­டி­யது, டோலா என தெரி­ய­வந்­தது.

அடி­யும் அவ­மா­ன­மும் தாங்­காது அங்­கி­ருந்து ஓடி­ய­வன், எங்கோ மறைந்து போய்­விட்­டான்.

பின்பு அவன் மலாக்­கா­வில் யாரோ உற­வி­னர் வீட்­டில் இருக்­கி­றான் என்ற செய்­தியைக் கேட்டு பல­ரும் நிம்­மதி அடைந்­த­னர். இதில் சலீ­மிற்­குத்­தான் அதி­கம் நிம்­மதி.

ஆனால் அந்த நிம்­ம­தி­யும் சில மாதங்­களே! டோலா­வின் உற­வி­னர் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு அவனை அழைத்து வந்து, இங்கு குடி­யி­ருந்த பெரி­ய­வர்­க­ளி­டம் பேசி சம­ர­சம் செய்து வைத்­த­னர். அதன் பின்­னும் டோலா அதி­கம் திருந்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. அவன் மன­தில் சலீம் மீதும் சலீ­மின் தந்தை மீதும் வஞ்­சம் இருந்­து­கொண்டே இருந்­தது.

இப்­ப­டியே சில காலம் சென்­ற­பின், ஒரு­நாள் காட்­டில் செம்­புப் பொருள்­க­ளைத் தேடிக்­கொண்­டி­ருக்­கும் போது, டோலா ஒரு கன­மான பழைய இரும்­புப் பொரு­ளு­டன் சலீமை நோக்கி வந்­தான். இதை கண்ட சலீம், தன்னை தாக்­கவே டோலா வரு­கி­றான் என்ற பயத்­தில் ஓட்­டம் எடுக்­கத் தொடங்­கி­னான்.

"சலீம்.. ஓடாதே நில்," என்று கூவி­யும், சலீம் நின்­ற­பா­டில்லை.

"உனக்­குக் கொடுப்­ப­தற்கே இந்­தப் பொரு­ளைக் கொண்டு வந்­தேன் பயப்­ப­டாதே," என்று மீண்­டும் உரக்­கக் கூவிச்­சொன்­ன­தும், சலிம் ஓட்­டத்தை நிறுத்தி தயங்­கி­ய­படி நின்­றான்.

சலீ­மின் அரு­கில் வந்த, டோலா, கைய­டக்­க­மாக வைத்­தி­ருந்த, ஏதோ கொஞ்­சம் துருப்­பி­டித்­த­து­மான உலோ­கப் பொருள் ஒன்றை எடுத்து சலீ­மி­டம் நீட்­டி­னான். அந்­தப் பொரு­ளின் மையப்­ப­கு­தி­யில், ஒரு செம்பு வளை­யம் தென்­பட்­டது.

"இதை உடைத்து எடுத்­தால், நடு­வில் இருக்­கும் செம்பு வளை­யத்தை நல்ல விலைக்கு விற்­க­லாம். ஆனால் இதை உடைக்க எடுக்க எனக்கு சோம்­ப­லாக இருக்­கிறது. வேண்­டு­மா­னால் நீ உன்­னி­டம் இருக்­கும் சில செம்­புப் பகு­தி­களை எனக்கு கொடுத்­து­விட்டு, இதை நீ பெற்­றுக்­கொள்," என்­றான்!

டோலா மீது உள்ள பயம் ஒரு­பு­றம் இருக்க, அவன் கையில் இருந்த பொரு­ளின் செம்­புப்­ப­குதி சலீம் கண்­களில் பட்­டது.

"அதி­கம் யோசிக்­காதே. எவ்­வ­ளவு கன­மாக இருக்­கிறது பார்த்­தாயா? உடைத்து எடுத்­தால் உள்ளே அதி­கம் செம்­புப் பகுதி இருக்­கும். இதை நீயே எடுத்­துக்­கொள். ஆனால் பதி­லுக்கு உன் பையில் இருக்­கும் சில செம்­புப் பொருள்­களை எனக்­குக் கொடு," என்று மீண்­டும் சற்று மிரட்­டும் பாணி­யில் சலீ­மின் முகத்­த­ருகே சென்று பேசி­னான்.

டோலா­வின் மீது கொண்ட பயம் ஒரு­பு­றம் இருந்­தா­லும், அவன் காட்­டிய பொரு­ளில் அதி­கம் செம்பு இருக்­கும் என்ற பேரா­சை­யும், சலீமை பற்­றிக்­கொண்­டது.

சரி என்று மெது­வாக தலையை அசைத்­த­படி, சற்று பயத்­து­டன், தன் அரைக்­கால் சட்­டை­யி­லி­ருந்து சில அழுக்­கே­றிய செம்­புத் துண்­டு­களை எடுத்து டோலா­வி­டம் கொடுத்­து­விட்டு, அந்த கைய­டக்­க­மான, உலோ­கப் பொருளை பெற்­றுக்­கொண்டு, வீடு நோக்கி விரை­வாக நடந்­தான்.

சலீம் வீடு சென்ற நேரம், அவன் தாயும் இரு தங்­கை­கள் மட்­டு­மன்றி, அவன் தந்­தை­யும் வழக்­கத்­துக்கு மாறாக வேலை­யி­லி­ருந்து விரை­வாக வீட்­டிற்கு வந்து சேர்ந்­துள்­ளார்.

உள்ளே வந்த சலீமைக் கண்­ட­வு­டன் அவ­ருக்­குக் கோபம் தலைக்­கே­றி­யது.

"நாளெல்­லாம் அந்­தக் காட்­டில் சுத்­து­வ­தி­லேயே இருக்­கி­றாயே. உன் அம்­மா­விற்கு துணை­யாய் வீட்­டில் இருக்­க­மாட்­டாயா?" என்று திட்ட ஆரம்­பித்­தார்.

தன் மக­னின் உடல்­நி­லை­யை­யும் அவ­னின் அறிவு வளர்ச்சி குன்­றிய நிலை­யை­யும் நினைத்து மிக­வும் கவலைகொள்­வார் அவர்.

போலிஸ் வேலை­யில் தான் பெறும் குறை­வான சம்­ப­ளத்­தைக் கொண்டு குடும்­பத்தை நடத்த அந்த மனி­தர் படும்பாடு அதி­கம்!

"அது என்ன உன் கையில் வைத்­தி­ருக்­கி­றாய்?" என்று சற்று ஆர்­வத்­து­டன் கேட்­டார் சலீ­மின் தந்தை.

"எனக்­குத் தெரி­ய­வில்லை, காட்­டில் கண்­டெ­டுத்த டோலா, இதை என்­னி­டம் கொடுத்­தான்," என்று சற்று தாழ்­வான குர­லில் பதில் சொன்­னான் சலீம்.

"ஓ.. இப்­பொ­ழுது டோலா உனக்கு நண்­ப­னாகிவிட்­டானா. அவன் உன்னை விரட்­டி­யதை மறந்துவிட்­டாயா?" என்று மகனை பார்த்து மீண்­டும் திட்ட ஆரம்­பித்­தார் சலீ­மின் தந்தை.

சிறிது நேர மௌனத்­தின்­பின்.. "என்­னி­டம் இருந்த சில சிறிய செம்­புப் பொருள்­களை எடுத்­துக்­கொண்டு இதை மாற்­றாக கொடுத்­தான். இந்­தப் பொரு­ளின் நடுப்­பகு­தி­யில் இருக்­கும் செம்­புப் பாகங்­கள் அதி­கம் இருப்­ப­து­போல் தெரிந்­த­தால் ஒத்­துக்­கொண்­டேன்," என்­றான் சலீம் தயங்­கி­ய­படி.

"இதை உடைத்து எடுக்­கும் சிர­மத்தை கரு­தியே உன்­னி­டம் தள்­ளி­விட்­டு­விட்­டான். நீ சரி­யான ஏமாளி," என்று மீண்­டும் சலீமை திட்­டி­விட்டு, சலீம் கொண்­டு­வந்த அந்த உலோ­கப் பொருளை கையில் வைத்­துப் பார்த்­தார்.

"இது என்­ன­வென்றே தெரி­ய­வில்­லையே. சரி, காராங்­கூனி வரும் நேரம்­தான் இது. அவ­னி­டம் இதை கொடுத்து காசு வாங்­கிக்­கொள்," என்று சொல்­லி­விட்டு உள்ளே சென்­று­விட்­டார்.

தந்தை சொன்­ன­தால் அந்த உலோ­கப் பொருளை தூக்­கிக்­கொண்டு வெளி வாச­லில் வந்து அமர்ந்­தான் சலீம்.

சிறிது நேரத்­தில் தூரத்­தில், தோலின் குறுக்கே நீண்ட கம்­பும், அதில் இரு­பு­ற­மும் கூடை போன்ற ஒன்றை சுமந்த வண்­ணம் அந்த சீன காரோங்­கூனி கிழ­வன் வரு­வ­தைக் கண்டு, ஆவ­லு­டன் எழுந்து நின்று, அவன் வரு­கைக்­காக காத்­தி­ருந்­தான் சலீம்.

அந்த காராங்­கூனி கிழ­வன் ஒவ்­வொரு வீட்­டின் வாச­லின்­முன் நின்று ஏதே­னும் வேண்­டாத சாமான்­கள் இருக்­கின்­ற­னவா என வழக்­கம்­போல் மலாய் மொழி­யில் கூவிக் கேட்­பான்.

அந்த வட்­டா­ரத்­தில் வாழும் பல­ருக்­கும் இந்த காராங்­கூனியை நன்கு தெரி­யும். அவர்­க­ளி­டம் விற்­ப­தற்கு எந்­தப் பொரு­ளும் இல்­லை­யெ­னில், அடுத்த வீட்டு வாச­லில் வந்து நின்று அதே வச­னத்தை பேசு­வான். இது அவன் தொழில் முறை. இப்­ப­டிப்­பட்ட தொழிலை அன்று சீனர்­களே அதி­கம் செய்­த­னர். அப்­படி காராங்­கூனி­யாக ஆரம்­பித்து, மெல்ல பாடு­பட்டு பெரும் வணி­க­ரா­னோ­ரும் பலர் அக்­கா­லத்­தில் இருந்­த­னர்.

பொறு­மை­யாக காத்­தி­ருந்த சலீமின் வாசல் வந்து சேர காராங்­கூனி கிழ­வ­னுக்கு இரு­பது நிமி­ட­மா­னது. காராங்­கூனி முகத்­த­ருகே அந்த உலோ­கப் பொருளை நீட்­டி­னான் சலீம்.

சலீம் அவ்­வப்­போது காட்­டில் பொறுக்கி கிடைத்த செம்பு, பித்­தளை போன்­ற­வற்றை இந்த காராங்­கூனியி­டம் விற்­ப­தால், இரு­வ­ருக்­கும் நல்ல அறி­மு­கம் இருந்­தது.

சலீம் கொடுத்த உலோ­கப்­பொருளை தன் வயோ­திக கண்களைச் சுருக்­கிய வண்­ணம் கைகளால் ஏதோ ஓர் அறி­வி­யல் நிபு­ணர் பாணி­யில், உருட்­டிப்­பார்த்­தான். அந்­தப் பொரு­ளின் மையப் பகு­தி­யில் மங்­க­லாக தோற்­றம் தந்த செம்பு வளை­யம் அவன் கண்­க­ளி­லும் தென்­பட்­டது.

"இதை இப்­ப­டியே வாங்­கிக்­கொள்ள முடி­யாது. வேண்­டு­மென்­றால் இதை உடைத்து செம்­புப்­ப­கு­தியைப் பிரித்து எடுத்து வா. அதை நிறுத்துப் பார்த்து பணம் தரு­கிறேன்," என்று சொல்­லி­ய­ப­டியே மீண்­டும் அப்­பொ­ருளை சலீ­மி­டமே கொடுத்­து­விட்டு, அடுத்த வீட்­டிற்கு நகர்ந்­தான் காராங்­கூனி.

சற்று குழப்­பத்­து­டன் நின்­று­கொண்­டி­ருந்த சலீம், சிறிது நேரத்­தில் வீட்­டிற்­குள் சென்­றான்.

அவன் கையில் இன்­னும் அந்­தப் பொரு­ளோடு நிற்­பதை அவன் தந்தை பார்த்­து­விட்­டார்.

"ஏன் இன்­னும் கையில் வைத்­துக்­கொண்டு இருக்­கி­றாய். காராங்­கூனி வேண்­டாம் எனச்­சொல்லி விட்­டானா," என்று சற்று ஆச்­ச­ரி­யத்­து­டன் கேட்­டார்.

கைகளில் வைத்­தி­ருந்த பொருளை மெல்ல தரை­யில் வைத்து­விட்டு ஓர் ஓரத்­தில் உட்­கார்ந்து, தன் தலை­யைச் சொரிந்து கொண்டே இரு­மி­னான் சலீம்.

சலீ­மின் தாய் தேநீர் தயா­ரித்­துக்­கொண்டே பேச ஆரம்­பித்­தாள்.

"இந்த காராங்­கூனி கிழ­வன் இப்­ப­டித்­தான். சில பொருள்களை அவன் வாங்­கு­வான் என நினைத்­துக் கொடுத்­தால், வேண்­டாம் என்று விடு­கி­றான்," என்று நொந்து­கொண்டே, தயா­ரித்த தேநீரை கண­வ­னுக்கு கொண்­டு­வந்து கொடுத்­தாள்.

ெமள­ன­மாக மூலை­யில் முடங்­கிக் கிடந்த சலீம்,

"அவன் வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை. அந்­தப் பொருளை உடைத்து, செம்­புப் பகு­தியைப் பிரித்து எடுத்­துத் தந்­தால், அதற்­கான பணத்­தைத் தரு­வ­தாகச் சொன்­னான்," என்று சொல்­லிக்­கொண்டே தன் போலிஸ்­கார தந்தை வைத்­தி­ருக்­கும் இரும்­புச் சாமான்­க­ளின் பெட்­டியைத் திறந்து, அந்­தப் பொருளை உடைத்­திட சுத்­தி­யும் ஓர் உளி­யை­யும் கையில் எடுத்­துக்­கொண்டு ஓர் ஓர­மாக அமர்ந்து அந்­தப் பொருளை உடைத்­தெ­டுக்க ஆயத்­த­மா­னான்!

மேசை­யில் தேநீர் அருந்­தி­ய­வண்­ணம் அமர்ந்­தி­ருந்த சலீ­மின் தந்தை மகனை உற்று நோக்­கி­னார். இரு­மிக்­கொண்டே அந்­தப் பொருளை உடைப்­ப­தற்­கான இடத்­தைத் தடவி ஆராய்ந்­த­படி பார்த்துக்­கொண்­டி­ருக்­கும் மக­னைப் பார்த்த தந்­தை­யின் உள்­ளம் நெகிழ்ந்­தது.

"பொறு சலீம். உடைக்­கி­றேன் என்று உளி­யால் உன் கையை காயப்­ப­டுத்­திக்­கொள்­ளாதே," என்று சொல்லி சலீம் உட்­கார்ந்­தி­ருந்த பக்­கம் வந்­தார்.

சலீ­மின் தாயும் சலீ­மிற்­கும் மற்ற பிள்­ளை­க­ளுக்­கும் இன்­னும் கொஞ்­சம் தேநீர் தயா­ரிப்­ப­தில் கவ­னம் செலுத்­திக் கொண்­டி­ருந்­தாள்.

சலீ­மின் அரு­கில் அமர்ந்த அவன் தந்தை மீண்­டும் அந்­தப் பொருளைப் பார்­வை­யிட்­டார்.

"இது ஏதோ போர்க் காலத்து சாமான்­க­ளின் ஓர் உடைந்த பகுதி போல் தெரி­கிறது," என்று தன் மனை­வி­யி­டம் சொல்­லிக்­கொண்டே அதை உடைத்­தெ­டுக்க ஆயத்­த­மா­னார்.

"சரி இதை உடைத்து செம்­புப் பகு­தியைப் பிரிக்­கி­றேன். நீ வெளி­யில் போய் காராங்­கூனியை அழைத்து வா," என்று சொல்­லவே, சலீ­மும் அந்த இடத்­தை­விட்டு அகன்­றான்.

சற்று நேரம் சென்­ற­பின் உளியை அப்­பொ­ரு­ளின்­மேல் வைத்து சுத்­தி­யால், அதன் நடுப்­ப­கு­தி­யில், ஓங்கி ஓர் அடி அடித்­தார் சலீ­மின் தந்தை. அவ்­வ­ள­வு­தான்..

'டமார்' என்ற காதை செவி­டாக்­கும் மிகப் பெரிய சத்­தத்­து­டன் வெடித்­தது அந்­தப் பொருள்!

ஆஆஆ.... என்ற அல­றல் சத்­தத்­து­டன் சலீ­மின் தந்தை ஒரு­பு­றம் தூக்கி எறி­யப்­பட்­டார். சலீ­மின் தாயும் அல­றி­ய­படி கீழே விழுந்­தாள்.

வீடு முழுக்க புகை மண்­ட­லம். வீட்­டின் மேல்­கூ­ரைப்­ப­குதி உடைந்து கீழே விழுந்து எங்­கும் தூசும் புகை­யும் பர­வி­யது.

ஆம்! வெடித்த பொருள் ஒரு இரண்­டாம் உல­கப்­போ­ரின் போது புதை­யுண்டு கிடந்த ஒரு கையெறி குண்டு!

இந்­தப் பெரிய சத்­தம் வெகு­தூரம் வரை கேட்­டது. அதிர்ந்­து­போன அக்­கம்­பக்­கத்­தார் ஓடி வந்­த­னர் உத­விக்கு. வெடித்துக் கொட்­டிய சிமென்ட் சித­றல்­க­ளுக்­கி­டையே மூச்சுப் பேச்­சின்றி கிடந்­தார் சலீ­மின் தந்தை.

அந்தோ பரி­தா­பம்! அவ­ரின் இட­துகை துண்­டிக்­கப்­பட்டு இரத்த வெள்­ளத்­தில் கிடந்­தது. பக்­கத்­தில் அவர் மனை­வி­யும் காயமடைந்து வலி­யால் முன­கிக்­கொண்டு கிடந்­தாள். அவ­ளின் தொடைப்­ப­கு­தி­யில் ஆழ­மான காய­மேற்­பட்டு இரத்­தம் கசிந்­தது.

நல்லவேளை­யாக அவர்­க­ளின் இரண்டு பெண்­பிள்­ளை­களும் இரண்டு வீடு தாண்டி விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­னர். காராங்­கூனியைத் தேடிச்­சென்ற சலீ­மும் வெடிச்­சத்­தத்­தால் அதிர்ச்­சி­யும் குழப்­ப­மும் அடைந்து வீடு நோக்கி ஓடி வந்­தான்.

போலிஸ், ஆம்­பு­லன்ஸ் மற்­றும் செய்­தி­யா­ளர்­கள் என்று விரைந்து வந்­த­னர். பெரிய கூட்­டம் கூடி­விட்­ட­தால் போலிஸ் கூட்ட கட்­டுப்­பாட்­டில் இறங்­கி­னர்.

சிறிது நேரத்­தில் ஆம்­பு­லன்ஸ் இரு­வ­ரை­யும் ஏற்­றிக்­கொண்டு மருத்­து­வ­ம­னைக்கு விரைந்­தது. கூடவே துண்­டிக்­கப்­பட்ட சலீ­மின் தந்­தை­யின் கையை­யும் எடுத்­துச் சென்­ற­னர்.

கூட்­டம் மெல்ல பேசிக்­கொண்டே கலைந்து சென்­றது.

"வெடித்­தது கையெறி குண்டு என்­கி­றார்­களே?" என்­றான் ஒரு­வன்.

"எல்­லாம் இந்த தரித்­தி­ரம் பிடித்த சலீ­மி­னால் வந்த கேடு," என்­றான் மற்­றொ­ரு­வன்.

"இந்த டோலா பயல்­தான் வேண்­டு­மென்றே வெடி­குண்டு என்று தெரிந்­தும் ஏமாற்றி சலீ­மி­டம் கொடுத்­தான் என்­றும் சொல்­கி­றார்­கள்," என்­றான் இன்­னொ­ரு­வன்.

"இவர் போலிஸ்­கா­ரர் ஆயிற்றே. சலீம் கொண்டு வந்­தது வெடி குண்டு என்று எப்­படி தெரி­யா­மல் போயிற்று," என்று மேலும் ஒரு­வன் கேட்­டான்! அந்த வட்­டா­ரம் முழுக்க இதே பேச்சுத்தான்.

பல­ரும் தன்­மீது சந்­தே­கத்­து­டன் பார்ப்­ப­தும், அவன் காது­பட, அவன் தான் அது கையெறி குண்டு என்று தெரிந்தே சலீ­மி­டம் கொடுத்­தான் என்று பேசு­வ­தை­யும் கேட்டு கவ­லை­யும் ஆத்­தி­ர­மும் கொண்­டான் டோலா.

போலி­சும் அவனை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யது. இத­னால் வெறுப்­ப­டைந்­த­வன், பழை­ய­படி மலாக்­கா­விற்கே நிரந்­த­ர­மாக சென்று­விட்­டான். உண்­மை­யில் படிப்­ப­றி­வற்ற டோலா­விற்­கும் இது ஒரு கையெறி குண்டு என்­பது தெரி­யாது.

மருத்­து­வ­ம­னை­யில் சில காலம் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்­பி­னார் சலீ­மின் தந்தை. துண்­டிக்­கப்­பட்ட கையை உட­லோடு சேர்த்து­வைக்க எவ்­வ­ளவோ முயன்­றும் மருத்­துவ குழு­வி­ன­ரால் இய­ல­வில்லை. போலி­சில் வேலை­செய்­தும் ஒரு பழைய கையெறி குண்டை அடை­யா­ளம் கண்­டு­கொள்­ளத் தெரி­யா­மல் போன­தற்கு அவர் மீது குற்­றம் சுமத்தி விசா­ரணை நடத்­தி­னர்.

ஆயி­னும் அவ­ரின் நிலையைக் கண்டு இறங்கி, விசா­ரணை கைவி­டப்­பட்டு, அவர் பணி­பு­ரிந்த போலிஸ் துறையிலேயே ஓர் எழுத்து வேலைக்கு அமர்த்­தப்­பட்­டார். அவ­ரின் நிலையைக் கண்டு அனு­தா­பத்­தால், ஊழி­யர் பலர் நிதி திரட்டி செயற்கைக் கையொன்றை பொருத்த உத­வி­னர். சலீ­மின் தாயும் சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­னாள். அவ­ளின் தொடைப் பகுதி மிக­வும் ஆழ­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தும் எப்­ப­டியோ தேறி­விட்­டாள். காலம் உருண்­டோ­டி­யது.

இப்­பொ­ழுது நிலைமை அமை­தி­யா­னது. காலை­யில் சிறிய தோல்­பையைச் சுமந்த வண்­ணம் சலீ­மின் தந்தை அசை­யாத செயற்­கைக் கையு­டன் வேலைக்­குச் செல்­வதை கத­வோ­ரம் நின்று கண்­க­லங்கி பார்த்­துக்­கொண்­டி­ருப்­பான் சலீம். தந்­தை­யின் இந்த துயர நிலைக்கு தானே கார­ணம் என்ற குற்ற உணர்வு அவனை கண்­க­லங்க செய்­தது. அவர் சென்­ற­தும் வெளி­யில் வந்து நின்­றான். தூரத்­தில் தெரி­யும் காடு அவன் கண்­களில் பட்­டது. ஒரு காலத்­தில் செம்­புக்­காக பொழு­தெல்­லாம் அலைந்து திரிந்த அந்தக் காட்டை இப்­பொ­ழுது வெறுத்து எரித்­தனஅவன் கண்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!