தமிழ் மொழி மூலம் வேர்களைத் தேடும் மலாய் இளையர்

இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் கல்விச் சுமைக்கு நடுவே துணைப்பாட வகுப்புகளுக்கும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் நேரத்தை வகுத்து செயல்படுவதே பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த ஒரு சூழலிலும் தனது தாய் மொழி அல்லாத தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார் 17வயது வாலீட் பாக்கீர்.

தனது இந்திய பூர்வீகத்துடன் இருக்கும் தொடர்பை வலுப்படுத்துவதே அவரது முயற்சியின் தலையாய நோக்கமாகும். “எனது தந்தைவழி கொள்ளுப்பாட்டியார் இந்தியாவிலிருந்து வந்தவர். அவரது வம்சாவளியில் வந்த எனக்கு இந்திய பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் பொருப்பு உள்ளது," என்று கடமையுணர்சியுடன் சொல்லியிருந்தார் வாலீட்.
வாலீட் கூகல் திரான்ஸ்லெட் இணையத்தளத்தின் வாயிலாக தான் முதன்முதலில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் கற்றுக்கொண்டவற்றை அவரது தமிழ் நண்பர்களோடு பகிர்ந்துக்கொண்டு அவற்றைச் சரிப்பார்ப்பார்த்ததாகவும் கூறியிருந்தார். 

தமிழின் அடிப்படை வார்த்தைகளைக் கற்றுக்கொண்ட பிறகு வாலீட் இந்திய உணவகங்கள் மற்றும் மற்ற பொது இடங்களில் தமிழர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் தமிழில் பேச முயற்சித்தார். "முதலில் நான் தமிழில் பேசுவதைக் கேட்டவுடன் அவர்கள் மிகவும் ஆச்சிரியப்பட்டனர். அவர்களது தாய்மொழியில் நான் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்," என்றார் வாலீட். 
தமக்கு யானைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் இந்திய கலாசாரத்தில் யானைகள் அதிகம் இடம்பெறுவதால் தமிழ் மொழி மீதும் தமக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது என்றார் வாலீட்.  

"திராவிட மொழிகளில் ஒன்றான தமிழ் மிக பழமை வாய்ந்த ஒரு மொழியாகும். அதுமட்டுமில்லாமல், தென் கிழக்காசியா ஒரு காலத்தில் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டதால் இந்தப் பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் சாயலை இன்றும் காணலாம்," என்று தான் இணையத்தில் அறிந்துக்கொண்டவற்றைப் பகிர்ந்துகொண்டார் வாலீட். 

பாத்லைட் பள்ளியில் உயர்நிலை நான்கில் பயிலும் வாலீட் ஒரு வகைக் கற்றல் வளர்ச்சி குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓர் இளையர். ஆயினும், இந்த ஒரு குறை அவரது இலக்கில் அவர் கொண்டிருக்கும் உறுதியான விடாமுயற்சியைச் சிறிதும் பாதிக்கவில்லை.  

எனினும் அவரது தமிழ்க் கற்கும் பயணம் எளிதாக இருந்ததில்லை. “பலர் அவர் தமிழில் பேசும்போது ஆச்சிரியப்பட்டு அவரைப் பாராட்டினர். ஆனால், சிலரோ அவர் தமிழையும் இந்தியர்களையும் கேலி செய்யவதாகத் தவறாக புரிந்துக்கொள்ளவும் நேரிட்டது,” என்றார் திருமதி அரினா. அந்நிலையிலும் வாலீட் மனந்தளரவில்லை. தமிழ்க் கற்றுகொள்ளவதற்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் சற்றும் இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.

வாலீட் தனது 'என்' நிலை தேர்வுகளை முடித்தவுடன் முறையாக தமிழ் மொழியை மொழி நிலையங்களுக்குச் சென்று கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய விரும்புகிறார் அவரது தாயார். தான் இதுவரை பெற்றிருக்கும் பயிற்சியை இன்னும் மேம்படுத்தி தனது தமிழ் மொழி வளத்தை அதிகரிப்பதை வாலீட்டும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்.