சேலம் அருகே பேருந்துகள் மோதல்; எழுவர் பலி

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் கள் இருவர் உட்பட எழுவர் பலி யாகினர்; நாற்பதுக்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் அறுவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் அருகே பூக்களை ஏற்றிச் சென்ற சிறிய சரக்கு லாரி ஒன்று பழுதாகி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலை யில், நேற்று அதிகாலை சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக இருந்ததால் அந்தச் சரக்கு லாரி மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது.

லாரிக்கு மிக அருகில் சென்ற பின்னரே அதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர், அதன் மீது இடிக்காமல் இருக்க பேருந்தைத் திருப்ப முயன்றார். இருந்தாலும், லாரி மீது இடித்த அந்தப் பேருந்து, நிற்காமல் சாலை நடுவே இருந்த தடுப்புகளை உடைத்து எதிர்த் திசையில் சென்றது. அதனால் அவ்வழியே வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து மீது அது மோதியது. திடீரென ஏற்பட்ட மோதலால் பெங்களூரில் இருந்து கேரளாவின் திருவல்லா நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து தலைக்குப்புறக் கவிழ்ந் தது. இதில் அப்பேருந்தில் பயணம் செய்த எழுவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

காயமடைந்தவர்கள் அனை வரும் சேலம் அரசு மருத்துவமனை யிலும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மூன்று வயது குழந்தை உயிருடன் மீட்கப் பட்டு, பராமரிப்பிற்காக குழந்தை கள் நல அலுவலரிடம் ஒப்படைக் கப்பட்டது. தகவலறிந்ததும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகரக் காவல் ஆணையர் சங்கர் உள் ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக் குச் சென்று, அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆட்சியர் ரோகிணி ஆறுதல் கூறினார். சொகுசுப் பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமார் உட்பட ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.