எம்ஆர்டி நிலையத்தில் கைகலப்பு, இரு ஆடவர்கள் கைது

டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் அடிதடி சண்டையில் இறங்கியதன் தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை இரவு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். தொடர்ந்து, 20 மற்றும் 36 வயதுகளையுடைய இரு ஆடவர் கள் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இருவரும் கைகலப்பில் இருப் பதைக் காட்டும் இரண்டு நிமிடக் காணொளிக் காட்சி ஒன்று பொதுமக்களிடையே வாட்ஸ்அப் மூலம் வலம் வந்ததைத் தொடர்ந்து ஸ்டோம்ப் இணையத்தளத்திலும் நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதில் கறுப்பு நிற உடை அணிந்த ஓர் ஆடவரும், நீல நிற உடை அணிந்து முதல் ஆடவரை விட சற்று உயரமான இன்னோர் ஆடவரும் டோபி காட் எம்ஆர்டி நிலையத்தின் வடகிழக்கு ரயில் பாதையில் காத்திருக்கும் ரயில் மேடையில் சண்டையிடுவது காட் டப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குத்துவதும் தள்ளிவிடுவதுமாக காணொளிக் காட்சி காண்பிக் கிறது. கறுப்பு உடை அணிந்திருந்த ஆடவரின் முகம், கழுத்து ஆகிய வற்றின் வலது பக்கம் ரத்தமாக இருப்பது போன்றும் காட்சியில் இருந்தது.

அவர்களின் சண்டையைத் தடுக்க ஒரு பெண் மற்றும் சில எம்ஆர்டி ஊழியர்கள் முன்வந்தும் அவர்களால் சண்டையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கறுப்பு உடை அணிந்திருந்த ஆடவர் குடி போதையில் இருப் பதாக காணொளியில் தோன்றிய அந்தப் பெண் பலமுறை கத்துவது போன்று பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு கட்டத்தில் ஆடவர்கள் அருகில் ஒரு சிறுவன் வேடிக்கைப் பார்த்து நின்றதும் பின் அவர்களை விட்டு அகலுமாறு கூறப்பட்டதாகவும் காணொளிவழி தெரியவந்தது. ஆடவர்கள் சண்டை போட்டதுடன் தகாத சொற்களாலும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் இருவர் சண்டைபோடுவதைக் காட்டும் காணொளி வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களிடையே வலம் வருகிறது. படம்: ஸ்டோம்ப்