திண்டுக்கல்: எகிப்து, நைஜீரியா, துருக்கி நாடுகளில் இருந்து இறக்குமதியான பெரிய வெங்காயம் நேற்று திண்டுக்கல் சந்தைக்கு வந்ததால் அதன் விலை ரூ. 50 வரை குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 110க்கு விற்கப்பட்டது. இருந்தாலும் சின்ன வெங்காயம் விலை ரூ. 200க்கு விற்கப்படு வதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கலில்தான் இருக்கிறது.
இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஒரு நாளில் 200 டன் பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டு விற்கப்படும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 40 டன் சின்ன வெங்காயம் இந்தச் சந்தைக்கு வந்து சேரும். ஆனால் கடந்த ஒரு மாதமாக வெங்காய வரத்து இந்தச் சந்தைக்குப் பெரிதும் குறைந்துவிட்டது.
இந்த நிலையில், இறக்குமதியான பெரிய வெங்காயங்கள் வந்து சேர்ந்தன. இவை கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
இதனிடையே, சின்ன வெங்காயம் எங்கும் கிடைக்கவில்லை என்றும் இதனால் சின்னவெங்காயம் விலை குறைவு என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றும் வியாபாரி ஒருவர் கூறினார்.