பொதுவாக 'எல்டிஎல்' எனப்படும் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்பு அமிலங்கள் உடலில் அதிகமாகச் சேர்ந்தால் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகின்றது. அதே சமயத்தில், உடலில் இருக்கும் 'எச்டிஎல்' எனப்படும் உயர்ந்த அடர்த்தி கொழுப்பு அமிலங்கள் 'எல்டிஎல்' கொழுப்பை ரத்த நாளங்களில் இருந்து வெளியேற்றி கல்லீரலுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. இதனால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய 'எச்டிஎல்' கொழுப்பு அமிலங்கள் உடலில் கூடுதலாக இருந்தால் உடல் நலத்துக்கு உகந்ததே என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், மிதமான அளவில் இருந்தால் 'எச்டிஎல்' கொழுப்பு அமிலங்கள் இதயத்துக்கு நன்மை சேர்த்தாலும் அவற்றின் அளவு அதிகரிக்கும்போது அவை சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாகி உயிருக்கு உலை வைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மிசௌரியில் உள்ள வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனை உறுதிசெய்கிறது. 'எச்டிஎல்' கொழுப்பு அமிலங்களின் அளவு, சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி அக்டோபர் 2003 முதல் செப்டம்பர் 2013 வரை 1.7 மில்லியன் பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதன்படி, மிதமான அளவில் 'எச்டிஎல்' கொழுப்பு அமிலங்கள் இருந்தால் அவை இதயத்தைப் பாதுகாப்பதோடு சிறுநீரகம் போன்ற பிற உறுப்புகளுக்கும் ஊறு விளைவிப்பதில்லை. ஆனால், குறைவான அல்லது அதிகமான அளவில் 'எச்டிஎல்' கொழுப்பு அமிலங்கள் உடலில் இருந்தால் இதயம், சிறுநீரகம் போன்றவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வாழ்நாளைக் குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.