ப. பாலசுப்பிரமணியம்
எளிதில் நாம் மேற்கொள்ளக் கூடிய பல செயல்பாடுகள் சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த ஜான் தனேஷுக்கு சவாலாக அமையலாம். இருப்பினும், ஒரு போதும் இவர் நம்பிக்கை இழக்கவில்லை. தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக சமூக நிறுவன நிர்வாகத் துறையில் பட்டயக் கல்வி மேற்கொள்கிறார் 17 வயது ஜான். தாயார், பாட்டி ஆகியோரை உள்ளடக்கிய ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தின் அங்கமான ஜான் படிப்படியாக முன்னேறி, கற்கும் சூழலில் ஒருங்கிணைய பலர் உதவியுள்ளனர். இந்த நன்றியை அவர் மறந்திடவில்லை.
தன் பங்கிற்குப் பிறருக்கு உதவுவதே தன் வாழ்க்கைத் தொழிலாக அமைய வேண்டும் என இத்துறையில் பயில முடிவு செய்ததாக ஜான் கூறினார். இவரது கற்றலுக்கு 'ஸ்கிரீன் ரீடர்' செயலி உதவுகிறது. அச்செயலி சொற்களை அவருக்கு வாசித்துக்காட்டுகிறது. கற்றலுக்கு அவர் கைக்கணினியையும் சாதாரண விசைப்பலகையையும் பயன்படுத்துகிறார். "குழு நடவடிக்கையென்று வரும்போது, அதில் ஜானின் முழு ஈடுபாடு இருக்கும். வகுப்பில் நிறைய கேள்விகள் கேட்பார், எனது மாணவர்களில் அதிக தன்முனைப்பு உடையவராக அவர் திகழ்கிறார்," எனக் கூறினார் ஜானின் விரிவுரையாளரான திரு பீட்டர் லீ, 39.
கண் பார்வையின்மையால் சில பாடங்களை ஜான் மேற்கொள்ள முடியாது. ஆனாலும் அந்த வகுப்புகள் நடத்தப்படும்போது விரிவுரையாளர்கள் கற்பிப்பதைச் செவிமடுத்து ஜான் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போது அது சக மாணவர்களி டையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஜானின் மற்றொரு விரிவுரையாளரான திரு டேனி லீ தெரிவித்தார். "நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்திற்கு முன்னேற வேண்டும். அங்கு சட்டம், சமூக வியல் தொடர்பான துறைகளில் பயின்று ஒரு வழக்கறிஞராக வேண்டும்," என்பதே தமது இலக்கு என்றார் ஜான்.
வழக்கறிஞரின் சேவையை நாடுவதற்கு சிலருக்கு வசதி இருக்காது என உணரும் ஜான், எதிர்காலத்தில் அத்தகையோருக்கு இலவசமாக உதவ விரும்புகிறார். விருப்பமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட பார்வை யின்மை தடையாக இருந்த தில்லை. பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜான் ஜூரோங் நீச்சல் வளாகத்திற்குச் சென்று நீந்துகிறார். "யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் அவருக்கு உதவுவதில் மனம் ஒருவித திருப்தி கொள்கிறது. தனிமனிதனாக உலகை என்னால் மாற்றிட முடி யாது. ஆனால் என் வாழ்நாளில் குறைந்தது 5 பேருக்காவது உதவ முடிந்தால் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும் என்று கருதுகிறேன்," என்றார் ஜான்.