தோக்கியோ: ஒலிம்பிக்கில் ஆண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் துனீசிய வீரர் அஹ்மெத் ஹஃப்னாவிய்.
தகுதிச் சுற்றில் ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டவர் ஹஃப்னாவிய். நேற்றைய போட்டியில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 43.36 விநாடிகள். தனது கனவு நனவானதாகச் சொன்ன 18 வயது ஹஃப்னாவிய், வெற்றியைத் தன்னால் நம்பமுடியவில்லை என்றார். இந்த வெற்றி, வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டுகளில் துனீசியா வென்றிருக்கும் ஐந்தாவது தங்கப் பதக்கம். நீச்சல் போட்டிகளில் அந்நாடு மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது.
போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் ஆஸ்திரேலியாவின் ஜேக் மெக்லஃப்லின். வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமெரிக்காவின் கியரன் ஸ்மித்.
துனீசியாவின் முன்னாள் தேசிய கூடைப்பந்து வீரரின் மகனான ஹஃப்னாவிய், 2018 இளையர் ஒலிம்பிக் விளையாட்டுகளின் 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் நான்காவதாக முடித்தார். 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் பிரிவில் ஏழாவதாக முடித்தார்.
2024ஆம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில்தான் முதன்முறையாகத் தங்கம் வெல்லும் இலக்கைக் கொண்டிருந்தார். இப்போது தோக்கியோவில் தனது இலக்கையே மிஞ்சிவிட்டார் ஹஃப்னாவிய்.
நாளை 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதிலும் பங்கேற்கவுள்ளார் ஹஃப்னாவிய்.
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அதிலும் அவருக்குத் தங்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் 4X100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியை 3 நிமிடங்கள் 29.69 விநாடிகளில் முடித்து உலகச் சாதனையை முறியடித்து தங்கத்தைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கனடா வெள்ளிப் பதக்கத்தை வென்றது. வெண்கலத்தை வென்றது அமெரிக்கா.
ஆண்கள் ஒற்றையர் கலப்பு பாணி நீச்சலில் அமெரிக்காவின் சேஸ் கலிஸ்ச் தங்கம் வென்றார். அந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார் அமெரிக்காவின் ஜே லித்தர்லண்ட்.