லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்காற்பந்தின் இந்தப் பருவத்தில் இன்னும் ஒரு கோல்கூட அடிக்காததால் தமது ஆட்டத்திறன் குறித்துக் கேள்வி எழுப்பியோர்க்கு 'ஹாட்ரிக்' கோல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் தலைவர் ஹேரி கேன் (படம்).
இந்தப் பருவத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக்கில், ஸ்லோவேனியாவின் என்எஸ் மூரா குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மோதின.
அந்த ஆட்டத்தில் முதல் பதினொருவரில் ஒருவராக இடம்பெறாத நிலையில், கடைசி அரைமணி நேரத்திற்குமுன் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார் கேன்.
அப்போதே 2-1 என ஸ்பர்ஸ் குழு முன்னிலையில் இருக்க, 68, 77, 88வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து முத்திரை பதித்தார் கேன். இதனால், ஸ்பர்ஸ் 5-1 என வெற்றிபெற்றது.
"முன்கள வீரர்கள் எல்லாருமே கோலடிக்க விரும்புவர். நான் உதைக்கும் பந்து வலையை முத்தமிடும்போதெல்லாம் நன்றாக உணர்கிறேன்," என்றார் கேன்.