சிங்கப்பூரின் 'கம்ஃபர்ட்டெல்குரோ கார்ப்' நிறுவனம் அடுத்த ஆண்டியிறுதியிலிருந்து ஆஸ்திரேலியாவில் 'ஹைட்ரஜன் ஃபியூவல் செல்' பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்ற ஆண்டு பிரிட்டனின் லண்டன் நகரிலும் இந்நிறுவனம் இத்தகைய பேருந்துகளை இயக்கத் தொடங்கியது. மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள கீலோங்கில் இரண்டு 'ஹைட்ரஜன் ஃபியூவல் செல்' பேருந்துகளை இயக்கப்போவதாக 'கம்ஃபர்ட்டெல்குரோ ஆஸ்திரேலியா' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இயங்கும் 'கம்ஃபர்ட்டெல்குரோ ஆஸ்திரேலியா', 'கம்ஃபர்ட்டெல்குரோ கார்ப்'புக்குச் சொந்தமான நிறுவனம்.
பாதுகாப்பாக வைக்கப்பட்ட 'ஹைட்ரஜன்', காற்றில் உள்ள உயிர்வாயு ஆகிய இரண்டையும் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 'ஹைட்ரஜன் ஃபியூவல் செல்' பேருந்துகள் இயங்கும். இதர மின்வாகனங்களைப் போல் இவை கரியமில வாயுவை வெளியேற்றாதவை.
பொதுவாக மின்கலன்களில் ஓடும் வாகனங்களை இயங்கவைக்க சில மணிநேரம் ஆகும். 'ஹைட்ரஜன் ஃபியூவல் செல்' வாகனங்களுக்குச் சில நிமிடங்கள் போதும்.