பாசிர் ரிஸ்-பொங்கோல் மும்முனைப் போட்டி

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்: எங்களால், நிலையான, பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க முடியும் என்பதை வாக்காளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்.

பாசிர் ரிஸ்-பொங்கோலில் இந்த முறை மும்முனைப் போட்டி. மசெக, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுடன், புதிய கட்சியான ‘மக்கள் குரல்’ கட்சியும் இங்கு களத்தில் இறங்கியுள்ளது.

இதற்கு முன், 1992ஆம் ஆண்டு மரின் பரேட் குழுத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் பன்முனைப் போட்டி இருந்தது.

“நான்கு-முனை போட்டியைச் சந்தித்துள்ளேன்” என்று கூறிய இத்தொகுதிக்கான மசெகவின் முக்கிய வேட்பாளர் டியோ சீ ஹியன், “எங்களால், நிலையான, பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க முடியும் என்பதை வாக்காளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், 65, துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, 47 உட்பட புதிய முகங்கள் திரு முகம்மது ‌‌‌ஷாரேல் தாஹா, 39, யோ வான் லெங், 44, டேஸ்மண்ட் டான் கோக் மெங், 50, ஆகியோர் மசெக சார்பில் இத்தொகுதியில் நிற்கின்றனர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி டெஸ்மண்ட் லிம் பாக் சுவான், 53, ஹர்மிந்தர் பால் சிங், 48, அபு முகம்மது, 69 ஆகியோருடன் புது முகங்களான கெல்வின் ஓங், 34, குஸ்வாடி அத்னாவி, 57 ஆகியோர் போட்டியிடுகின்றனர்.