தர்மன் தலைமையிலான ஜூரோங் குழுத் தொகுதி அணிக்கு சாதனை வெற்றி

ஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய கட்சியான ஒன்று பட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியை (ஒசிபுக) தோற்கடித்து 74.62 வாக்குகளுடன் சாதனை வெற்றியைப் பெற்றது. 

அந்த அணியில் முன்பு இருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மற்றொரு குழுத் தொகுதி அணிக்கு மாற்றப்பட்டும், இந்த அணியில் உள்ள வேட்பாளர்கள் தொடர்பில் வேட்புமனு தாக்கல் தினத்துக்கு முன் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய பிறகும், மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்தின் தலைமையிலான மசெக அணிதான் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க் கப்பட்டது. 

ஜூரோங் குழுத் தொகுதியில் பதிவான 122,883 வாக்கு களில் மசெகவுக்கு 91,692 வாக்குகளும் ஒசிபுகவுக்கு 31,191 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. திரு தர்மன் அணியில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங், ரஹாயு மஹ்ஸாம், புதிய வேட்பாளர்களான சீ யால் சுவான், ஷோன் ஹுவாங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அதிக வாக்கு எண்ணிக்கையால் கிடைத்த வெற்றி காரணமாக மசெக அணி மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று ஜூரோங் குழுத் தொகுதி குடியிருப்பாளரான 42 வயது லூ சின் டா கூறினார். 2015 பொதுத் தேர்தலில் திரு தர்மன் தலைமை வகித்த மசெக அணி 79.3% வாக்குகளைப் பெற்றது.