‘கோஜெக்’ வாடகை வாகனம் வழிதடுமாறி நீச்சல் குளத்திற்குள் இறங்கியதில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த மூதாட்டியும் வாகன ஓட்டியும் உயிர்தப்பினர்.
அப்பர் புக்கிட் தீமா சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
மகளையும் பேத்தியையும் பார்க்க 78 வயது மலேசியரான வசந்தா குமரன் அன்றைய தினம் காலைதான் சிங்கப்பூர் வந்திறங்கினார். சம்பவம் நாள் இரவு 7.51 மணிக்கு செங்காங் ஃபெர்ன்வேல் பகுதியிலுள்ள மகளின் வீட்டிலிருந்து அப்பர் புக்கிட் தீமாவிலுள்ள பேத்தி வீட்டிற்கு கோஜெக் வாகனத்தில் தனியாகப் புறப்பட்டார் திருவாட்டி வசந்தா.
வாகனத்தை முன்பதிவு செய்த அவருடைய பேத்தி யோகேஸ்வரி நித்தியானந்தன், 42, இணைய வரைபடத்தில் வாகனத்தின் பயணத்தை கண்காணித்து வந்தார்.
தீவு விரைவுச்சாலையிலேயே நெடு நேரமாக வாகனம் நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த யோகேஸ்வரி, பாட்டியையும் வாகன ஓட்டுநரையும் தொடர்புகொள்ள முயற்சித்தார்.
இருமுறைக்குமேல் பாட்டியின் மலேசிய எண்ணைத் தொடர்புகொள்ள இயலவில்லை. ஒரு கட்டத்திற்குமேல் வாகன ஓட்டுநரும் கைப்பேசியை எடுக்காத சூழலில் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
“வாடகை வாகனத்தில் நான் தனியாகப் பயணித்தது இதுதான் முதன்முறை. இப்போது நினைத்தாலும் மிகவும் பதற்றமாக இருக்கிறது,” என்ற திருவாட்டி வசந்தா சம்பவத்தை விவரித்தார்.
“வாகனம் புறப்பட்டதிலிருந்தே ஓட்டுநர் வழிதெரியாமல் தடுமாறினார். கடும் மழையில் சரியாக பாதையும் தெரியாத சூழலில் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி வழிகேட்டார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் கழித்து 9.17 மணிக்கு பேத்தி குடியிருக்கும் ஹில்சைட் அடுக்குமாடி குடியிருப்பிற்கு (Hillside Condominium) வந்துசேர்ந்தார் திருவாட்டி வசந்தா.
“வாகனம் நீச்சல்குளத்தை நெருங்கியபோதே, அது நீச்சல் குளம் என அலறினேன். ஓட்டுநர் என்னைப் பொருட்படுத்தவில்லை. அது நீச்சல்குளம் அல்ல தரையில் உள்ள மழைநீர் என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாகனம் குளத்திற்குள் இறங்கிவிட்டது” என்று படபடப்புடன் கூறினார் திருவாட்டி வசந்தா.
வாகனத்தின் முதல் இரண்டு சக்கரங்களும் 1.8 மீட்டர் ஆழமுள்ள நீச்சல்குளத்திற்குள் மூழ்க ஆரம்பித்ததும் திருவாட்டி வசந்தா, கைப்பையை எடுத்துக்கொண்டு காரின் கதவைத் திறந்து நீச்சல்குளத்திற்குள் இறங்கி வேகமாக கரையேறினார். குடியிருப்பின் காவலாளிகள், அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவினர்.

“வெள்ளை நிற வாகனம் ஒன்று நீச்சல் குளம் இருக்கும் பக்கமாக வருவதைக் கண்டு, விரைவாக சென்று பின்னோக்கிச் செல்லுமாறு எச்சரித்தேன். ஆனால் ஓட்டுநரோ தொடர்ந்து முன்னால் சென்றதால் வாகனம் நீச்சல்குளத்திற்குள் இறங்கிவிட்டது“ என்று அக்குடியிருப்பின் காவலாளிகளுள் ஒருவர் கூறினார்.
வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருந்த யோகேஸ்வரி, வாகனம் வந்துவிட்டதை கோஜெக் செயலியில் கண்டு, தன்னுடைய பணிப்பெண் ராஜலெட்சுமி துரைபாண்டியிடம், குடையை எடுத்துச்சென்று பாட்டியை வீட்டிற்கு அழைத்துவருமாறு கூறினார்.
வாகனங்கள் வந்துசெல்லும் கூடத்தில் பத்து நிமிடத்திற்கும்மேல் காத்திருந்தும் கார் வராததால், பணிப்பெண் அங்கிருந்தபடியே யோகேஸ்வரிக்கு தகவல் அளித்தார். அப்போதுதான், நீச்சல்குளம் அருகில் திருவாட்டி வசந்தா இருப்பதை குடியிருப்பின் கீழுள்ள கிளப் ஹவுஸிலிருந்து (Club House) தொலைபேசி மூலம் காவலாளிகள் தெரியப்படுத்தினர்.
சம்பவம் பற்றி அறிந்திராத யோகேஸ்வரி, பணிப்பெண்ணை கிளப் ஹவுஸுக்குச் சென்று பாட்டியை அழைத்து வருமாறு கூறினார். அங்கு சென்ற பணிப்பெண், குளத்திற்குள் இறங்கிய நிலையில் இருந்த காரையும் நனைந்த நிலையில் நின்ற திருவாட்டி வசந்தாவையும் கண்டு அதிர்ந்தார்.
திருவாட்டி வந்தாவும் பணிப்பெண்ணும் வீட்டிற்கு சென்று, அங்கு நடந்தவற்றைக் கூறவே குடும்பத்தினருக்கு விவரம் தெரியவந்தது. அதன்பின் கீழே சென்று பார்த்தபோது அங்கு காவல்துறை விசாரித்து வருவதை யோகேஸ்வரி கண்டார்.
தம்முடைய நலன் குறித்து மருத்துவ உதவியோ, அவசர மருத்துவ ஊர்தியோ தேவையென்றால் ஏற்பாடு செய்து தருவதாகவும் காவல்துறை தெரிவித்ததாக திருவாட்டி வசந்தா கூறினார்.
“தவிர்க்க முடியாத வேலை இருந்ததால், பாட்டியைத் தனியாக அனுப்பினோம். இதுவரை இச்சம்பவம் குறித்து கோஜெக் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மன்னிப்புக்கோரும் மின்னஞ்சல் மட்டுமே வந்தது. நிறுவனம், வழிதெரியாத ஓட்டுநருக்கு உதவவில்லை. வண்டி வர தாமதமாகி நான் அழைத்தற்கும் பதில் சொல்லவில்லை,” என்று ஆதங்கப்பட்டார் யோகேஸ்வரி.
கோஜெக் நிறுவனம் அனுப்பியிருந்த மின்னஞ்சலில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கண்டிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து பயணிகளின் நலனை முன்னிறுத்தி அவர்கள் பணிபுரிவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக யோகேஸ்வரி கூறினார்.
அன்று பின்னிரவு 1 மணியளவில் நீச்சல்குளத்திலிருந்து கார் அப்புறப்படுத்தப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.
மலேசியாவின் சிரம்பான் பகுதியில் தனியாக வசித்து வரும் திருவாட்டி வசந்தா, இச்சம்பவம் தமது துணிச்சலைக் குலைத்துவிட்டது என்றார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 3) மகளுடன் இந்தியா செல்லும் திட்டத்தில் இருக்கும் திருவாட்டி வசந்தாவின் பயணம் குறித்து குடும்பத்தினர் யோசிக்கின்றனர்.