உறவினரைக் காயப்படுத்திய ஆடவருக்கு 20 வாரச் சிறை

தனது உறவினரின் முகத்தில் குத்தி அவரது மூக்கையும் கண்குழி எலும்பையும் உடைத்த 26 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வெர்னர் லோ யொக் யென் என்ற அந்த ஆடவர் தனது உறவினர் குமாரி சுசி ஓவின் கடையில் விநியோக வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அவர்கள் ஓரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி காலையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பொருள்கள் தயாராகவில்லை என்று லோ கடை ஊழியரைக் கடிந்து கொண்டார். அப்பொழுது குமாரி ஓ, லோவை அவரது வேலை மனப்போக்கைக் கவனிக்குமாறு கூறினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே தான் கேட்டுக்கொண்ட விடுப்பை சுசி அங்கீகரிக்கவில்லை என்று கோபம் கொண்டிருந்தார் லோ. விடுப்பு கேட்ட நாளில் வேலைக்கு வந்த லோ மீண்டும் குமாரி ஓவிடம் விடுப்பு வேண்டும் என்றார். அதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையால் விடுப்பு கொடுக்க இயலாது என்று குமாரி ஓ கூறினார்.

எரிச்சலைடைந்த லோ தான் வேலையிலிருந்துவிலகப் போவதாகச் சொன்னார். அதற்கு குமாரி ஓ வேலையை விட்டும் வீட்டை விட்டும் செல்லலாம் என்று பதிலளித்தார். பின்னர் வீடு திரும்பிய குமாரி ஓ, லோ வீட்டில் இருப்பதைப் பார்த்து மீண்டும் கடிந்துகொண்டார். இதைக் கேட்டலோ, குமாரி ஓவின் முகத்தில் சரமாரி யாகக் குத்தினார். வீட்டிலிருந்தோர் லோவைத் தடுத்தனர். குமாரி ஓ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்கு நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவரின் மருத்துவச் செலவு சுமார் $9,250 ஆனது. கடுங்காயங்கள் விளைவித்த குற்றத்திற்காக லோவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

Loading...
Load next