பொங்கிப் பெருக்கெடுத்த இறையுணர்வு

வில்சன் சைலஸ்

பிற்பகலில் மழை பெய்தபோதும் முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தீமிதித் திருவிழா சிறப்பாக நடந்தேறியது. சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து நேற்றிரவு சுமார் 7.20 மணிக்கு பக்தர்கள் புடைசூழ தலையில் கரகத்துடன் புறப்பட்டு சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த தலைமை பண்டாரம், சுமார் 8.30 மணியளவில் பூக்குழி இறங்கி தீமிதித் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சுமார் 4,000 ஆண் பக்தர்கள் பூக்குழி இறங்கியும் பெண் பக்தர்கள் பூக்குழியை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

முதன்முறையாக இவ்வாண்டு தீமிதித் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கலாசார, சமூக, இளையர் துறைக்கான அமைச்சர் கிரேஸ் ஃபூ. தீமிதித் திருவிழா சிறப்பாக நடந்தேற சுமார் 800 தொண்டூழியர்கள் கைகொடுத்தது கண்டு வியந்துபோன திருவாட்டி ஃபூ, “இது சிங்கப்பூரில் இந்திய சமூகத்தின் வலிமையை, ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது,” என்றும் குறிப் பிட்டார். கலாசார அமைச்சராக இப்படிப் பிற சமய விழாக்களிலும் தாம் கலந்துகொள்வது முக்கியம் என்றும் இதன்மூலம் பிற சமயத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். இவ்வாண்டு கிட்டத்தட்ட 4,159 பக்தர்கள் கும்பிடுதண்டமும் 1,338 பக்தர்கள் அங்க பிரதட்சணமும் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். கிட்டத்தட்ட 4,450 பேர் பால்குடம் ஏந்தினர். 1,474 பேர் மாவிளக்கு எடுத்தனர். பூக்குழியில் பயன்படுத்துவதற்காக சுமார் 18,000 விறகுக் கட்டைகள் மலேசியாவில் இருந்து தருவிக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை மழை பெய்தபோதும் முந்தைய ஆண்டுகளைவிட இன்னும் சிறப்பாக தீமிதித் திருவிழா நடைபெற்றதாக ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் எஸ்.நல்லதம்பி கூறினார். இந்து அறக்கட்டளை வாரிய இணையத்தளம் வழியாகவும் யூடியூப் வழியாகவும் ஒளிபரப்பப் பட்ட இந்நிகழ்வை ஏராளமானோர் கண்டு பக்தியில் திளைத்தனர். படம்: த.கவி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது