முன்னோடித் தலைமுறை அரசு ஊழியர் குவா சூன் பீ காலமானார்

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த அரசாங்க ஊழியர் குவா சூன் பீ (படம்), நேற்று தமது 86வது வயதில் காலமானார். டாக்டர் குவாவின் உயிர் காலை 10 மணிக்குப் பிரிந்தது என்று அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். டாக்டர் குவா 1930ல் பிறந்தார். மருத்துவச் சேவையில் நெடுங்காலம் தனிச்சிறப்புமிக்க சேவையை அவர் ஆற்றி இருக்கிறார். டாக்டர் குவா, மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பிறகு 1956ல் மருத்துவ அதிகாரியாக அரசாங்கச் சேவையில் சேர்ந்தார். சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும் மருத்துவச் சேவைத்துறை இயக்குநராகவும் பணியாற்றிய அவர், 1996ல் அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

டாக்டர் குவா, ரத்தம், ரத்தம் தொடர்பான ஒழுங்கீனங்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வல்லமை பெற்றிருந்த சிங்கப்பூரின் முதல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. “டாக்டர் குவா சூன் பீ, சிங்கப்பூரின் மருத்துவப் பராமரிப்புத் துறையில் உண்மையான ஒரு முன்னோடி,” என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது. “சிங்கப்பூரின் நவீன மருத்துவச் சுகாதார முறைக்கு டாக்டர் குவா வலுவான அடித்தளத்தை அமைத்தவர்,” என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் பாராட்டினார். டாக்டர் குவா, பிரதமர் லீ சியன் லூங்கின் தாயாரான திருவாட்டி குவா கியோக் சூவின் தம்பி ஆவார்.