காரில் காதல் குறும்பு

சிம் யுமின் என்ற 36 வயது ஆடவர், பிடோக் ரெசர்வார் பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் அவருக்கு அழைப்பு வந்தது. அந்தப் பூங்காவில் இருக்கும் ஒரு கார் பேட்டையில் திரு சிம் தனது நிசான் காரை நிறுத்தி வைத்திருந்தார். அந்த கார் பேட்டையில் ஏதோ விபத்து நிகழ்ந்துவிட்டது என்று தொலைபேசியில் அழைத்தவர் கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட திரு சிம், அங்கு ஓடிபோய் தன் காரை பார்த்த போது கார் முழுவதும் கண்டதையும் கிறுக்கி யாரோ குறும்புத்தனம் செய்ததைப் பார்த்து வியப்படைந்தார், கோபம் அடைந்தார்.

அப்போது திடீரென்று 15 பேர் ஒரு வேனிலிருந்து கீழே குதித்து ‘ஏமாந்துவிட்டீரா’ என்று கத்தினார்கள். தன்னுடைய காரில் செய்யப்பட்ட குறும்புத்தனத்திற்குத் தன் காதலியான ஷரின் டான்தான் காரணம் என்பது அப்புறம் அவருக்குத் தெரியவந்தது. திரு சிம் வியப்பில் ஆழ்ந்தார். இத்தம்பதியின் 10வது ஆண்டை கொண்டாடும் வகையில் காதலியும் நண்பர்களும் சேர்ந்து இத்தகைய காரியத்தை 40 நிமிடங்களில் செய்தார்கள். இதற்கிடையே, இணையப் புழங்கிகள் அந்தக் கார் குறும்புத்தனத்துக்கு இலக்காகிவிட்டது என்று நம்பி ஸ்டோம்ப், வாட்ஸ்=அப் போன்றவற்றில் அதைப் பதிவேற்றி பலருடன் பகிர்ந்துகொண்டார்கள். நேற்றுக் காலை நிலவரப்படி 22,000 தடவைக்கும் அதிக தடவை அது இணையத்தில் பார்க்கப்பட்டது.

திரு சிம் தன்னுடைய நிசான் காருக்கு அருகே தன் காதலியுடன் இருக்கிறார். படம்: ஃபேஸ்புக்