கனடாவில் பயிற்சி: சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை பங்கெடுப்பு

கனடா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடு களுடன் பெரிய அளவிலான பலதரப்பு விமான போர் பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை கலந்து கொண்டிருப்பதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. கனடாவின் ஆகாயப் படை ஏற்று நடத்தும் ‘எக்சர்சைஸ் மாபிள் ஃபிளாக்’ என்ற அந்தப் பயிற்சி சென்ற திங்கட்கிழமை தொடங்கியது. கனடாவில் அல்பர்ட்டா மாநிலத்தில் உள்ள கனடா ஆகாயப் படையின் கோல்டு லேக் தளத்தில் பயிற்சி நடக்கிறது.

சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆகாயப் படைகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 2,000 வீரார்களும் இந்த ஆண்டு பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள். பயிற்சி வெள்ளிக்கிழமை முடிவடையும். சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் எட்டு F-16C/D போர் விமானங்களும் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள அதன் பீஸ் கார்வின் II அணியைச் சேர்ந்த சுமார் 100 வீரர்களும் பயிற்சியில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் ஆகாயப் படை குழு, இதர படைகளுடன் சேர்ந்து செயல்பட்டு தன்னுடைய ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்