மரணம் விளைவித்த விபத்தில் ஊபர் ஓட்டுநருக்கு 2 வார சிறைத் தண்டனை

தியோங் பாரு ரோட்டில் பாதசாரி ஒருவர்மீது காரை மோதிய 42 வயது ஊபர் ஓட்டுநருக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் வாகனம் ஓட்டுவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்சைச் சேர்ந்த 42 வயதான திரு எர்வின் டெலாகனா பெர்மிஜோ மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கார் மோதியதை அடுத்து, அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல், அதே நாளில் இறந்துபோனார். விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற ஊபர் ஓட்டுநர் சோ ஹான் சியோங், சீனப் புத்தாண்டை குடும்பத்தாருடன் கொண்டாட, $15,000 பிணையுடன் அனுமதி அளித்தார் நீதிபதி லியூக் டான். அடுத்த மாதம் 11ஆம் தேதி அவர் தனது தண்டனையைத் தொடங்குவார். கவனக்குறைவால் நோக்கமில்லா மரணம் விளைவித்ததற்காக சோவுக்கு ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்பட்டிருக்கலாம்.