போலியான திருமணங்களுக்கு ஏற்பாடு செய்த ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூரில் தங்குவதற்காக இரண்டு வியட்னாமிய பெண்களுக்குப் போலியான திருமணங்கள் நடத்திவைக்க ஏற்பாடு செய்த சிங்கப்பூரர் டான் சுவென் சின்னுக்கு ஓராண்டு சிறையும் $13,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இரண்டு ஆடவர்களை அந்தப் பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர், அந்தப் பெண்கள் டானின் வீட்டில் வாடகைக்குத் தங்கினர்.

இரண்டு திருமணங்களும் 2016-ஆம் ஆண்டு ஜூலையில் நடந்தன. ஆயினும், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இரு தம்பதியரும் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த மாதம் டான் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரின் குடிநுழைவு நடைமுறைகளைப்  பின்பற்றாமல் போலி திருமணம் உள்ளிட்ட வழிகளைக் கையாளும் தனிநபர்களைக் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் கடுமையான கண்ணோட்டத்துடன் கருதுவதாக அது தெரிவித்தது.

இத்தகைய போலி திருமணங்களில் ஈடுபடுவோருக்கு அல்லது ஏற்பாடு செய்வோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.