கார் மீது மோதிவிட்டு தப்பிய மற்றொரு கார்: பயணி காயம்

புக்கிட் தீமா ரோட்டில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை 3.30 மணியளவில் அப்பர் புக்கிட் தீமாவை நோக்கிய சாலையில் கார் ஒன்றின் மீது மோதிய மற்றொரு கார் நிற்காமல் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மோதிய வேகத்தில் அந்த கார் சாலையோரத் தடுப்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு கால்வாயில் நிலைகொண்டது. அதில் இருந்த 29 வயது ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் சுயநினைவோடு அவர் அனுமதிக்கப்பட்டார். லேசான காயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவிட்டார். விபத்தை நேரில் கண்டவர்களுக்கு ஃபேஸ்புக் மூலமாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. தப்பி ஓடிய கார் கறுப்பு நிற மஸ்தா=3 என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.