கிராஞ்சி முகாம் இரண்டில் முழுநேர தேசிய சேவையாளர் மரணம்

சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 33 வயது முழுநேர தேசிய சேவையாளர் கிராஞ்சி முகாம் இரண்டிலுள்ள கட்டடம் ஒன்றில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். படிக்கட்டுகளின் கீழ் அவர் அசைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவர் உயிரிழந்துவிட்டதாகக் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவ அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தார்.

அவரது மரணம் ராணுவப் பயிற்சியுடன் தொடர்புடையது அல்ல என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகத் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தெரிவித்தன.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகவும் அமைச்சு கூறியது.