தேசிய சேவை ஆற்றத் தவறியதற்காக டேவிஸ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்

சிங்கப்பூரின் இளம் காற்பந்தாளர் பென் டேவிஸ் தனது கட்டாய தேசிய சேவையை ஆற்றத் தவறியிருப்பதாகவும் அதனால் அவர் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்குவதாகவும் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்கைச் சேர்ந்த ஃபுல்ஹம் காற்பந்து குழுவுடன் கடந்தாண்டு ஜூலை மாதம் டேவிஸ் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில்  இணைந்தார். ஆயினும், அதற்காகத் தனது தேசிய சேவையை ஒத்திவைக்க டேவிஸ் விண்ணப்பித்தபோது தற்காப்பு அமைச்சு அதனை  மறுத்தது.

“திரு பெஞ்சமின் டேவிஸ் தேசிய சேவை ஆற்றத் தவறியுள்ளார். உரிய அனுமதியின்றி அவர் வெளிநாட்டில் தங்கியுள்ளார்,” என்று தற்காப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

டேவிஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் விவரித்தார். டேவிஸின் சொந்த ஆதாயத்திற்காக இந்த ஒத்திவைப்பை அனுமதிப்பது தேசிய சேவையைக் கடமை உணர்ச்சியுடன் நிறைவேற்றியவர்களுக்கு நியாயமாக இருக்காது என்று டாக்டர் இங் அப்போது கூறினார்.  

சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் தங்களது முழுத் திறனை மேம்படுத்த போதிய அனுமதி கொடுக்கப்படுகிறதா என்ற விவாதத்தை டேவிஸின் வழக்கு ஏற்படுத்தியுள்ளது.