தொலைத்தொடர்பு கட்டணச் சீட்டுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை

வாடிக்கையாளர்களுக்குக் கட்டணச்சீட்டுகளை அனுப்பும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இனி தரநிலைப்படுத்தப்பட்ட முறையின்படி, கட்டணங்களைப் பகுத்துக்காட்டவேண்டும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

வெவ்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைப் பகுத்துக் காண்பிக்க வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துவதாக ஆணையம் கூறியது.  சில நிறுவனங்களைக் காட்டிலும் வேறு சில நிறுவனங்கள் கட்டணங்களை அதிகமாக பகுத்துக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒருங்கிணைக்கப்பட்ட நெறிமுறையின்படி (Converged Code) தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மூன்றாம் தரப்புச் சேவை அல்லது கூடுதல் மதிப்புச் சேவைகளுக்காக வசூலிக்கும் கட்டணங்களைத் தங்களது கட்டணச்சீட்டுகளில் சேர்க்கவேண்டும். ரோமிங், ‘ப்ரிமியம் ரேட்’ சேவைகள், உலகளாவிய குறுந்தகவல் மற்றும் எம்எம்எஸ் கட்டணம் ஆகியவை இத்தகைய கட்டணங்களில் சில. கட்டணச்சீட்டுகள் குறித்த சர்ச்சைகளைத் தீர்க்க புதிய நடைமுறை உதவும் என்றது ஆணையம்.

தாங்கள் விண்ணப்பிக்காத ‘ப்ரிமியம் ரேட்’ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கடந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஃபேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்