அமைச்சர் ஈஸ்வரன்: மின்னியல் பொருளியலில் அரசாங்கமும் நிறுவனங்களும் இணைந்து செயல்படவேண்டும்

மின்னியல் பொருளியலில் உள்ள புதிய வாய்ப்புகளை ஊழியர்களும் நிறுவனங்களும் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவைக் கொடுப்பதிலும் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

தொழிற்துறை உருமாற்றத்திற்கான 23 வழிகாட்டித் திட்டங்கள், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவாற்றலை மேம்படுத்துவதற்காக  உருவாக்கப்பட்ட

‘ஏஐ’ சிங்கப்பூர் திட்டத்திற்கான 150 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு ஆகியவற்றைத் திரு ஈஸ்வரன் சுட்டினார். இந்த தேசிய முயற்சிகளும் நிறுவனங்களின் முயற்சிகளும் ஒன்றோடு ஒன்று இயங்கவேண்டும் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

கூகல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கியுள்ள புதிய மேம்பாட்டாளர் இடம் ஒன்றின் தொடக்க நிகழ்ச்சியின்போது உரையாற்றிய திரு ஈஸ்வரன், “அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் கட்டமைப்பு இயங்கவேண்டும் என்றால் அனைத்துத் திட்டங்களும் கைகோர்த்துச் செயல்படவேண்டும். இதுவே எங்களது இலக்கு,” என்றார் திரு ஈஸ்வரன். 

“தொழில்நுட்பமும் மின்னிலக்கமயமும் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இந்தப் புதிய மின்னிலக்கத் தீர்வுகளாலும் அரசாங்கம் மற்றும் பங்காளிகளின் ஒட்டுமொத்த முயற்சிகளாலும் வர்த்தகங்கள் இன்னும் போட்டித்தன்மையுடனும் புத்தாக்கத்துடனும் இருப்பதை நாங்கள் உறுதி செய்யலாம்,” என்றும் அவர் கூறினார்.

‘டிவெலப்பர் ஸ்பேஸ் அட் கூகல்’ (Developer Space @ Google) என்பது அந்த மேம்பாட்டாளர் இடத்தின் பெயர். 2,700 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள அந்த இடம், பாசிர் பாஞ்சாங்கிலுள்ள மேப்பல்ட்ரீ பிசினஸ் சிட்டியின் புளோக் 80ல் அமைந்துள்ளது. இணைய மேம்பாட்டாளர்களுடன் இணைந்து கூகல் இங்கு இணையம் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும். 

கூகல் போன்ற பெருநிறுவனங்களால் அனைத்துலக அளவில் சிங்கப்பூர் நிறுவனங்களும் ஊழியர்களும் அதிகம் நாடப்படுவர் என்று திரு ஈஸ்வரன் கூறினார். இந்நிறுவனங்களின் திறனாளர்களிடம் உள்ளூர் ஊழியர்களும் நிறுவனங்களும் கற்றுக்கொள்ளும்போது அவர்களது புத்தாக்கத் திறனும் போட்டித் திறனும் மேம்படும் என்று அவர் கூறினார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்

19 Jun 2019

கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

நகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படத்தில் மகளுடன் 35 வயது தந்தை ஜான்பாய் ஜான் டியோ.

19 Jun 2019

இரண்டு வயது மகளைக் கொன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு