மத்திய சேமநிதி பயன்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்த கருதும் வீவக

பழைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கான மத்திய சேமநிதி கடன் விதிமுறைகளைத் தளர்த்த தேசிய வளர்ச்சி அமைச்சு திட்டமிட்டு வருவதாக அதன் அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார். மே மாதத்தில் இந்தத் திட்டத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் திரு வோங் கூறினார்.

60 ஆண்டுகளுக்குக் குறைவான குத்தகைக் காலம் கொண்டுள்ள வீடுகளுக்கான மத்திய சேமநிதி பயன்பாட்டு விதிமுறைகளைப் பற்றி அவர் வியாழக்கிழமை (மார்ச் 7) பேசினார். 

“பழைய வீடுகளை வாங்குவோரின் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பது இந்த விதிமுறைகளின் நோக்கமாக இருந்தது. ஆயினும், 39 ஆண்டுகால வீட்டை வாங்கும் ஒருவர் தனது மத்திய சேமநிதியை முழுமையாகப் பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கலாம். ஆனால் ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தொகை கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல காரணம் ஏதும் இல்லை,” என்று அவர் கூறினார்.

“கவனம், வீட்டின் எஞ்சியுள்ள குத்தகைக்காலம் மீது இருக்கக்கூடாது. வீடு வாங்குவோர் தங்களது ஆயுட்காலம் முழுவதும் நீடிப்பதற்குப் போதிய குத்தகைக்காலம் கொண்ட வீடுகளை வாங்குவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். இதற்காக மத்திய சேமநிதி பயன்பாட்டு விதிமுறைகளை நாங்கள் தளர்த்தலாம்,” என்றும் அவர் சொன்னார்.