‘எந்த நாட்டையும் குறிவைத்து F-35 கொள்முதல் இடம்பெறவில்லை’

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை எஃப்-35 போர் விமானங்களைத் தன்னுடைய சொந்த பாதுகாப்பு அரணுக்காக கொள்முதல் செய்கிறது என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அது வேறு எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து வாங்கப்பட்டது அல்ல என்றும் வேறு எந்த நாட்டுடன் கூட்டு சேரும் நோக்கத்துடன் அவை கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அமைச்சு விளக்கியது.
சிங்கப்பூர் எஃப்-35 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய எடுத்திருக்கும் முடிவு, சீனாவின் வட்டார இலக்குகள் தொடர்பில் ஆசியாவுக்குள் அதிகரித்து வரும் கவலையின் அறிகுறியாக இருக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுவதாக அமெரிக்காவின் சிஎன்என் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு விளக்கம் அளித்தது.