என்டர்பிரைஸ் சிங்கப்பூர் முதலாண்டில் 76,000 நிறுவனங்களுக்கு உதவியது

அரசாங்கம் சென்ற ஆண்டு அமைத்த என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, முதலாண்டில் சுமார் 76,000 நிறுவனங்களுக்கு உதவி செய்திருப்பதாக அமைப்பின் முதல் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள அல்லது வெளிநாடுகளில் வளர்ச்சியடைய திட்டமிடும் உள்ளூர் நிறுவனங்கள் இவற்றுள் அடங்கும்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) ஓராண்டு நிறைவடையும் அமைப்பு, வியாழக்கிழமை (மார்ச் 14) அதன் முதல் ஆண்டறிக்கையை வெளியிட்டது.

நிறுவனங்கள் தங்களது ஆற்றலையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்திக்கொள்ளவும், வெளிநாடுகளில் வளர்ச்சி அடையவும் உதவி புரிந்த 7,000 திட்டப்பணிகளுக்கு அமைப்பு சென்ற ஆண்டு ஆதரவளித்தது.

அதோடு, $17.2 பில்லியன் வெளிநாட்டு விற்பனைகளையும் முதலீடுகளையும் உருவாக்குமென எதிர்பார்க்கப்படும் 570க்கும் மேலான வெளிநாட்டுத் திட்டப்பணிகளுக்கும் அமைப்பு துணை புரிந்தது.