உலகின் ஆக அதிக சராசரி ஆயுட்காலம் கொண்டுள்ள நாடு சிங்கப்பூர்

உலகின் ஆக அதிக சராசரி ஆயுட்காலத்தைக் (84.8 ஆண்டுகள்) கொண்டுள்ள நாடு சிங்கப்பூர் என்று  அண்மை சுகாதார அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. காலங்காலமாக  முதலிடம் வகித்த ஜப்பானைவிட சிங்கப்பூர் கூடுதலாக 1.5 ஆண்டுகளுடன் முந்திக்கொண்டது.

சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமாக வாழும் சராசரி காலம் 72.4 ஆண்டுகள் என்று ‘பர்டன் அஃப் டிசீஸ் இன் சிங்கப்பூர் (The Burden of Disease in Singapore) 1990- 2017’ என்ற அறிக்கை குறிப்பிடுகிறது. அதே வேளையில் சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமின்றி வாழும் சராசரி காலமும் அதிகரித்திருப்பதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

சிங்கப்பூரர்கள் பலரின் ஆயுட்காலம் அதிகரித்தபோதும் அவர்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2017ஆம் ஆண்டில் பிறந்த சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 84.8 ஆண்டுகள் என்றும் அவர்கள் அதில் 10.6 ஆண்டுகளைக் குன்றிய உடல்நலத்துடன் கழிப்பர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உடல்நலக் குறைபாட்டுடன் கழியும் சராசரி காலம் 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் என எதிர்பார்க்கப்படுகிறது. அகால மரணத்திற்கும் உடல் ஊனங்களுக்கும் இதய நோய், புற்றுநோய், எலும்பு தசை நோய், மனநோய் ஆகியவை முக்கிய காரணங்களாக இருப்பதாக அறிக்கை அடையாளப்படுத்துகிறது.