கல்வி அமைச்சு: தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மதிப்பீட்டு முறை பிரதிபலிக்கவேண்டும்

தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது சிங்கப்பூரின் கல்வித் தத்துவத்தில் அடங்கும். அதன்படி தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களுக்கான மதிப்பீட்டுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று நேற்று  கல்வி அமைச்சு கூறியது.

தற்போது தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் (பிஎஸ்எல்இ) அடிப்படை நிலையில் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு ‘AL6’ முதல் ‘AL8’ வரையிலான மதிப்பீட்டுத் தரங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ‘பிஎஸ்எல்இ’யில் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களுக்கு ‘AL6’ மதிப்பீட்டுத் தரத்தைவிட ஒரு சிறந்த மதிப்பளவைத் தருவது நியாயமல்ல. அத்துடன் சிறப்புக் கற்றல் தேவைகளுடைய மாணவர்கள் உட்பட அடிப்படை நிலையில் தாய்மொழி பயிலும் பல மாணவர்கள் விலக்கு பெறாத நிலையில் விலக்கு பெற்ற மாணவர்களுக்குச் சாதக நிலை ஏற்படுதல் நியாயம் இல்லை என்றது அமைச்சு.

இதன்படி நான்கு பாடங்களையும் பயின்று அவற்றுக்கான தேர்வுகளை ‘பிஎஸ்எல்இ’யில் எழுதும் பெரும்பாலான மாணவர்களின் பாட பளுவை அடையாளம் காணும் வகையில் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் தாய்மொழி மதிப்பீட்டுத் தரம், ‘AL6’ முதல் ‘AL8’ வரையில் அமைந்திடும். ஆசிய, வெளிநாட்டு மொழிகளை ‘பிஎஸ்எல்இ’ நிலையில் மாணவர்கள் பயில வழங்கப்படுவது குறித்து ஆலோசனை கூறப்பட்டது. 

இருப்பினும், நாட்டில் இம்மொழிகளுக்கான தேவையும் மாணவர் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அத்துடன் மற்ற கல்வி அமைப்புகள் இம்மொழிகளை மதிப்பிடும் முறை வேறுபட்டதாகவும் இருப்பதால் அந்த முடிவுகளை ஏற்றுகொள்ள முடியாது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.