துடுப்புப் படகு விபத்து: காணாமல் போன ஆடவரைத் தேடும் பணி தொடர்கிறது

துடுப்புப் படகை (கயாக்) சென்ற வாரம் ஓட்டிச் சென்று காணாமல் போன இரண்டு சிங்கப்பூரர்களில் ஒருவரின் உடல் கிடைத்துள்ள நிலையில் மற்றொருவரைத் தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது.

ஏழாவது நாளாக காணாமல் போன திரு டான் எங் சூனைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். ஒரு கப்பலும் இரு படகுகளும் தேடும் பணிக்குப் பயன்படுத்தப்படுவதாக நேற்று மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு தெரிவித்தது. கிட்டத்தட்ட 32 அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

காணாமல் போன திரு டானைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு வட்டாரத்தின் குடியிருப்பாளர்களுக்கும் தகவல் கூறப்பட்டது.

அத்துடன் உள்ளூர்வாசிகளும் மீனவர்களும் நீர்நிலையில் உள்ள தீவுகளில் தேடும் பணியில் உதவி வருகின்றனர்.   

நேற்று முன்தினம் பகல் 12.55 மணியளவில் 57 வயதான திருவாட்டி புவா ஜியோக் டின்னின் உடல், திரெங்கானு நீர்நிலையில் மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

காணாமல் போயிருந்த இருவரும் கடைசியாக உயிருடன் காணப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட 185 கிலோமீட்டர் தூரத்தில் திருவாட்டி புவாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் உயிர் காப்பு உடை அணிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் காண திருவாட்டி புவாவின் குடும்பத்தார் அழைக்கப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து திருவாட்டி புவாவின் மகன் திரு லூயிஸ் பங், 24, நேற்று காலை தன் தாயாரின் மரணத்தை உறுதிசெய்யும் வகையில் மிக உருக்கமாக தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்தான் காணாமல் போன இருவரின் உடைமைகளைஅவர்களின் குடும்பத்தினர் அடையாளம் கண்டனர்.

தேசிய தின நீண்ட விடுமுறையில் மெர்சிங்கில் உள்ள எண்டாவ் தீவுகளுக்கு 15 பேர் அடங்கிய குழு ஒன்று  கயாக் படகுகளில் கிளம்பியது. கடல்நீர் கொந்தளித்ததில் மற்றவர்களிடமிருந்து இவ்விருவரும் பிரிந்து காணாமல் போயினர்.