சிங்கப்பூரின் எண்ணெய் சாராத ஏற்றுமதிகள் ஜூலையில் 11.2% சரிவு

சிங்கப்பூரின் ஏற்றுமதி எதிர்பார்த்ததைவிடக் குறைவான சரிவை அடைந்திருந்தாலும், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஈரிலக்கச் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்னணுத் தொழில்துறையின் மந்தநிலையே இதற்கான முக்கிய காரணம். 

ஜூலை மாதத்தில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 11.2 விழுக்காடு சரிந்ததாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், ஏற்றுமதி 15.4 விழுக்காடு சரியும் என புளூம்பர்க் கணிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

மாத அடிப்படையில், ஜூலை மாதத்தின் ஏற்றுமதி 3.7 விழுக்காடு வளர்ச்சி அடைந்து, ஜூன் மாதத்தின் 7.8 விழுக்காடு சரிவுநிலையை மாற்றியது. 

இவ்வாண்டு ஜூன் மாதத்தின் ஏற்றுமதிகள், சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், 17.4 விழுக்காடு சரிவடைந்தது. சென்ற 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேர்ந்த 33.2 விழுக்காடு சரிவுக்குப் பிறகு இதுவே ஆகப்பெரிய சரிவாகும். 

ஆண்டு அடிப்படையில், மின்னணு ஏற்றுமதிகள் ஜூலையில் 24.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டன. ஜூன் மாதத்தின் வீழ்ச்சி 31.9 விழுக்காடு. மின்னணு அல்லாத ஏற்றுமதிகள் ஜூலையில் 6.6 விழுக்காடு சரிந்தன. இது ஜூன் மாதத்தின் 12.6 விழுக்காட்டுச் சரிவைவிடக் குறைவு. 

மின்னணு அல்லாத ஏற்றுமதிகளில் மருந்துப்பொருள் ஏற்றுமதியே ஆக அதிகமாக 32.7 விழுக்காடு சரிவடைந்தது. 

சிங்கப்பூர் அதிகமாக ஏற்றுமதி செய்யும் 10 சந்தைகளில், அமெரிக்கா தவிர்த்த மற்ற எல்லா சந்தைகளுக்கும் ஏற்றுமதிகள் சரிந்தன. ஜப்பான், மலேசியா, ஹாங்காங் ஆகிய மூன்று நாடுகளுக்கான ஏற்றுமதிகளே ஆக அதிகமாகச் சரிந்தன. 

தலையெடுத்துவரும் சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் ஜூலையில் 29.6 விழுக்காடு குறைந்தன. இது ஜூன் மாதத்தின் 17.0 விழுக்காட்டுச் சரிவைவிட அதிகம். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்