$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை

வைர நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர், தனது கடைசி வேலை நாளில் மொத்தம் $250,000 மதிப்புள்ள 298 நகைகளை மொத்தமாக மலேசியாவிற்கு விற்க எடுத்துச் சென்றுவிட்டார்.

லோவிஸ் டயமண்ட்ஸில் உதவி செயல்பாட்டு மேலாளராக பணிபுரிந்த லோ கின் லியோங், 29, இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

அந்த மலேசியருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் முதலில் லோவிஸ் டயமண்ட்ஸில் விற்பனை நிர்வாகியாக 2013இல் சேர்ந்தார்.

துணை அரசாங்க வழக்கறிஞர் விக்டோரியா டிங், லோ நிறுவனத்தின் இரண்டு விற்பனை நிலையங்களின் விற்பனை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

ஒன்று நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள பிடோக் மாலில் இருந்தது, மற்றொன்று பூன் லே வே அருகே கேட்வே டிரைவில் உள்ள வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் இருந்தது.

இரண்டு விற்பனை நிலையங்களுக்கும் காக்கி புக்கிட்டில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்திற்கும் இடையில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான முழு அங்கீகாரமும் லோவுக்கு இருந்தது.

பின்னர் அவர் தனது கடைசி நாள் வேலை 2016 பிப்ரவரி 24 என்று முடிவு செய்து, கடைகளில் இருந்து மதிப்புமிக்கப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தினார்.

பிடோக் மால் கடையின் தனது துணை அதிகாரிகளில் ஒருவரிடம் 101 நகைகளை வெளியே எடுக்கும்படி கேட்டார்.

அதன் பிறகு, நகைகள் நிறுவனத்தின் வெஸ்ட்கேட் விற்பனை நிலையத்திற்கு மாற்றப்படும் என்பதைக் குறிக்க அவர் கடையின் புள்ளி விற்பனை முறையைப் பயன்படுத்தினார்.

இரவு 8 மணியளவில், மற்றொரு துணை அதிகாரி வெஸ்ட்கேட் விற்பனை நிலையத்திற்கு நகைகளை ஒரு பையுடன் கொண்டு வருவதைக் கண்டார்.

லோ பின்னர் மதிப்புமிக்கப் பொருட்களுடன் ஒரு கறுப்பு குப்பைப் பையில் வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அடுத்த நாள் மதியம் 1.40 மணியளவில், மலேசியாவில் மதிப்புமிக்கப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்பு, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக நகைகளுடன் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டார்.

அவற்றை விற்றதிலிருந்து அவர் பெற்ற தொகை குறிப்பிடப்படவில்லை.

லோவிஸ் டயமண்ட்ஸின் வணிக மேலாளர் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி போலிசிடம் புகார் கொடுத்தார்.

சிங்கப்பூர் போலிஸ் படை, ராயல் மலேசியா காவல்துறையிடம் உதவி கோரியதையடுத்து அதன் அதிகாரிகள் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி லோவைக் கைது செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.

நகைகளும் அவற்றை விற்றலிருந்து கிடைத்த வருமானமும் மீட்கப்படவில்லை.

நம்பிக்கை மீறல் குற்றத்திற்காக, அவர் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.