மூத்த ஊழியர்களுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது

மூத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தற்போதைய வேலையில் தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றனர்.மூத்த ஊழியருக்கான நிலையம்  மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சுமார் 400க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சுமார் 300 மூத்த ஊழியர்களிடம் நிலையம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் பாதிக்கும் மேற்பட்டோர் முழுநேர வேலையில் நீடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். இதனால் மூத்த ஊழியர்களுக்கு வாழ்க்கைத் தொழிலில் திட்டமிட அதிக உதவிகள் தேவைப்படுவதாக நிலையம் குறிப்பிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய தின பேரணி உரை நிகழ்த்திய பிரதமர் லீ சியன் லூங், ஓய்வு வயதும், மறு வேலை வாய்ப்பு வயதும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். வரும் 2022ல் ஓய்வு வயது 63க்கும் 2030ல் 65க்கும் மறு வேலை வாய்ப்பு வயது தற்போதுள்ள 67லிருந்து 2022ல் 68க்கும் 2030ல் 70க்கும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நிலையில் மூத்த ஊழியர்களிடம் வேலை செய்யும் ஆர்வத்தை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டடது.

(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

மூத்த ஊழியர்களுக்கான நிலையத்தின் நிர்வாக இயக்குநரான லிம் சியா ஹோ, “மூத்த ஊழியர்கள் நீண்டகாலம் வேலை செய்ய விரும்புகின்றனர், இருந்தாலும் எப்படி, எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிய அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.

“மூத்த ஊழியர்கள் தங்களுக்குப் பொருந்தாத வேலையைத் தேர்வு செய்யக்கூடும். இதனால் எந்த இடத்தில் எத்தகைய வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை மூத்த ஊழியர்கள் அறிவது அவசியம்,” என்று அவர் கூறினார்.

மூத்த ஊழியர்களுக்கான நிலையம், இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ஒருநாள் முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் வேலை-வாழ்க்கை பயிற்சியில் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் குறிப்பாக 55, 62, 67 வயதுகளில் மூத்த ஊழியர்கள் எதிர்நோக்கும் வேலை, ஓய்வு, சுகாதாரம், குடும்பம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி காட்டப் படுகிறது. 

கடந்த 2016ல் தொடங்கப்பட்ட பயிற்சியில் நாற்பது நிறுவனங்களை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தனிப்பட்ட முறையிலும் மூத்த ஊழியர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். மூத்த ஊழியர்கள் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய Silverjobs.sg எனும் இணையத் தளத்தையும் கடந்த ஆண்டு நிலையம் தொடங்கியது.