மனநலம் காக்க சமூக அணுகுமுறை தேவை

சிங்கப்பூரில் உயிரைமாய்த்துக்  கொள்வது போன்ற எண்ணத்தைத் தடுத்து மனநலத்தைப் பாதுகாக்க முழுமையான சமூக அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இளையர்கள் தங்களுக்குத் தாங்களே பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களிடம் தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கும் காரணமான அம்சங்களைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ள சுகாதார அமைச்சு பல அமைச்சுகளோடும் அமைப்புகளோடும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மூத்த சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார். 

சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சருமான அவர், நேற்று சிங்கப்பூர் மனநல மாநாட்டில் உரையாற்றினார்.

மனநலம் என்பது வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் அனைவருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்திய அமைச்சர்,  மனநலம் உடல்நலத்தையும் சார்ந்து இருப்பதால் இந்த இரண்டு நலன்களையும் காப்பதற்கு முழுமையான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். 

சிங்கப்பூரில் 2016ல் நடத்தப்பட்ட மனநல ஆய்வு ஒன்றைப் பார்க்கையில் ஏழு பேரில் ஒருவர், தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மனநலப் பிரச்சினையை அனுபவித்து இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. 

இது 2010ஆம் ஆண்டில் இருந்த அளவைவிட அதிகம். சிங்கப்பூர் மக்களிடையே மனநலப் பிரச்சினைகள் நோய்களுக்கு முக்கிய காரணமாக ஆகி வருவதைக் கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சு மேம்படுத்தப்பட்ட சமூக மனநல பெருந்திட்டம் வழியாக மக்களின் மனநலனில் முதலீடு செய்ய உறுதிபூண்டு இருக்கிறது என்றும் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார். 

இந்தத் திட்டம் 2017ல் தொடங்கப்பட்டது. பல அம்சங்களைக் கொண்ட உத்தியாக இடம்பெறும் இந்தத் திட்டம் முன்கூட்டியே மனக் கோளாறுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உரிய ஆதரவையும் பராமரிப்பையும் வழங்க வகைசெய்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

மனநல மேம்பாட்டில் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மாணவர்கள், ஊழியர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லாரும் மனநலத்தை சிறந்த முறையில் கட்டிக்காக்க உதவ சுகாதார மேம்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

Loading...
Load next