மருத்துவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் பதவியிலிருந்து மற்றவரின் மேற்பார்வையின்கீழ் மட்டுமே மருத்துவம் பார்க்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் மறுவாழ்வுப் பயிற்சிக்குச் செல்லும்படி தற்போது டான் டோக் செங் மருத்துவமனையின் அவசரகால மருத்துவத் துறையில் பணிபுரியும் டாக்டர் டேமியன் இயோ எங் ஹுவிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்டர் இயோ ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, 2.69 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் மூன்று ‘நிமிடாசேபம்’ மயக்க மாத்திரைகள், போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவற்றை அவர் வைத்திருந்தார்.

இதன் காரணமாக அவர் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் உட்கொண்ட காரணத்துக்காக அவர் போதைப்பொருள் மறுவாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். மற்ற குற்றங்களுக்காக அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செய்த குற்றம் காரணமாக வேலை இழந்த டாக்டர் இயோ 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வரை அவரது வேலை நியமன ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலையில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக டாக்டர் இயோ போதைப்பொருள் உட்கொண்டதாகவும் மறுவாழ்வு பயிற்சிக்குப் பின் அவரது நிலை முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

Loading...
Load next