$441,000 மதிப்பிலான இணைய மோசடிகள்

இணைய வர்த்தகம் உள்ளிட்ட மோசடிகளின் தொடர்பில் 278 வழக்குகள் விசாரிக்கப்படுவதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம்  $247,000க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 29 முதல் நேற்று (நவம்பர் 7) வரையிலான காலகட்டத்தில் வர்த்தக விவகாரத் துறையுடன் ஏழு போலிஸ் பிரிவு அதிகாரிகள் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 60 பெண்கள் உட்பட மொத்தம் 140 மோசடிப் பேர்வழிகள் சிக்கினர். அவர்கள் 14 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் விசாரணையில் உதவி வருவதாகவும் கூறப்பட்டது.

'லஸாடா', 'ஷாப்பீ' ஆகிய இணைய விற்பனைத் தளங்களின் போலி அதிர்ஷ்டக் குலுக்கல் தொடர்பாக இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 192 புகார்கள் பெறப்பட்டதாகவும் அதில் குறைந்தது $194,000 மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் போலிசார் தெரிவித்தனர். சமூக ஊடக நண்பர்களின் போர்வையில் மோசடிக்காரர்கள் இதில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

அந்த இணைய விற்பனைத் தளங்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் எதையும் நடத்தவில்லை என்பதைப் போலிசார் உறுதிப்படுத்தினர்.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.