$11.4 மி. மதிப்புள்ள வீட்டுக் கடன் மோசடி; வழக்கறிஞர் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு

வீட்டுக் கடனுடன் ரொக்கம் பெற்றுத் தரும் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் உட்பட பத்து பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சுமார் 11.4 மில்லியன் வெள்ளி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் இயோ சூ காங் அருகே உள்ள சராகா டெரசில் உள்ள ஒரு வீட்டுக்கு அடைமானக் கடன் பெறுவதற்காக வழக்கறிஞரான முஹமட் லுஃப்தி ஹுசைன், 53 பொய்யான சான்றிதழ் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலப் பட்டாச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் மோசடி பற்றி தெரிவித்த போலிசார், அதிகபட்ச வங்கிக் கடனைப் பெற்று அதன் மூலம் ரொக்கம் பெறுவதற்காக சொத்தின் மதிப்பு செயற்கையாக அதிகரித்துக் காட்டப்பட்டது என்று கூறினர். 2014க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் மோசடிக் குற்றச்செயல்கள் நடந்துள்ளன.

இதற்கு உடந்தையாக இருந்த சுஃபாண்டி அஹமட், 39, கோக் சியவ் லியோங், 46, பிஜாபஹதூர் ராய் ஸ்ரீ கான்டிராய் ஆகிய மூவர் மீதும் ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இம்மூவரும் வீட்டை விற்பவரிடமும் அவரது முகவரிடமும் பேசி வீட்டின் மதிப்பை கூட்டி வீட்டுக் கடனைப் பெற ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக வீட்டை விற்றவரிடமிருந்து வங்கியிலிருந்து கூடுதலாகக் கிடைத்த தொகையை அவர்கள் வாங்கிக் கொண்டனர்.

மேலும் வீட்டை வாங்கும் ஆவணங்களில் பெயர் குறிப்பிடுவதற்காக ஆட்களை சேர்த்ததாகவும் வங்கிக் கடன் பெறுவதற்காக பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இப்படி பெயர் குறிப்பிடப்பட்ட சிலர் மாதத் தவணையைக் கட்டத் தவறியதால் வீட்டுக் கடன் மோசடி பற்றி தெரிய வந்தது என்று போலிசார் கூறினர்.

இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்ற மோசடியில் 8,518,000 வெள்ளி மதிப்புள்ள மூன்று அடைமானக் கடன்களை அவர்கள் பெற்றுள்ளனர்.

சுமார் 2.9 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நான்காவது அடைமானக் கடனைப் பெறவும் அவர்கள் முயற்சி செய்தனர்.