பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சிஓஇ எண்ணிக்கை குறையும்

அடுத்த மாதம் முதல் ஏப்ரல் வரை சற்று குறைவான வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 6,350 சிஓஇ வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் 6,830 சிஓஇயைவிட இது குறைவு.

இதில் 1,600சிசி, 130பிஎச்பி வரையிலான சிறிய கார்களுக்கான சிஓஇ எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1,945ஆக இருக்கும். தற்போது அந்த எண்ணிக்கை 2,036ஆக உள்ளது. 

1,600சிசி அல்லது 130பிஎச்பிக்கும் அதிகமான பெரிய கார்களுக்கான சிஓஇ எண்ணிக்கை 1,966ஆக இருக்கும். தற்போது அந்த எண்ணிக்கை 2,023ஆக உள்ளது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 655 சிஓஇ வழங்கப்படும். தற்போது அந்த எண்ணிக்கை 754ஆக உள்ளது.

வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கு 629 சிஓஇ வழங்கப்படும். தற்போது அந்த எண்ணிக்கை 635ஆக உள்ளது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ எண்ணிக்கை தற்போதுள்ள 1,382லிருந்து 1,155ஆக குறையவுள்ளது.

வாகனம் வைத்திருப்பவர்கள் அதிகமானோர் 10 ஆண்டுகள் முடிவில் சிஓஇயை புதுப்பித்துக்கொள்வதே புதிதாக வழங்கப்படும் சிஓஇயின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம்.

எனினும், அடுத்த மூன்று மாத காலத்தில் சிஓஇ எண்ணிக்கை குறையவுள்ள போதிலும் பொருளியல் மந்தநிலை காரணமாக புதிய கார்களுக்கான தேவை குறைவாக இருக்கும் என்பதால் சிஓஇ கட்டணங்கள் பெரிதாக உயராது என மோட்டார் வாகன விற்பனையாளர்கள் பலர் கருதினர்.