சிங்கப்பூர் போலிசார் விளக்கம்: மலேசிய போலிசாரிடம் சிங்கப்பூரர் சட்டப்படியே ஒப்படைக்கப்பட்டார்

2015ஆம் ஆண்டில் மலேசிய போலிசாரிடம் சிங்கப்பூரர் ஒப்படைக்கப்பட்டது சட்டப்படியே நடைபெற்றது என்று போலிசார் நேற்று தெரிவித்தனர்.

இந்த ஒப்படைப்பு முறைப்படி நடைபெற்றதா என்று இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில பதிவுகள் சந்தேகம் எழுப்பியிருந்தன.

இதற்குப் பதில் அளித்த போலிசார், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஐம்பது வயது சிங்கப்பூரரான மோகன் ராஜாங்கம் மலேசிய போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று கூறினர்.

இம்மாதம் 10ஆம் தேதி திரு மோகன் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் திரு மோகன் மலேசிய போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று விளக்கமளித்த சிங்கப்பூர் போலிசார், “2015ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி போதைப் பொருள் மற்றும் குண்டர் கும்பல் குற்றச்செயல் தொடர்பாக மோகனை மலேசிய போலிசாரிடம் ஒப்படைத்தோம்,” என்று கூறினர்.

மலேசிய நீதிமன்றம் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை மலேசிய போலிசார் காட்டியபிறகே அவரை சட்டப்படி ஒப்படைக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவத்தின்போது மோகன் எங்கு இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது என்று கூறப்பட்டதையும் சிங்கப்பூர் போலிசார் மறுத்துள்ளனர்.

“2015, மார்ச் 21ஆம் தேதி மோகனின் வீடு சோதனையிட்டபோது அவரது மனைவி, தாயார், சகோதரி ஆகியோர் அங்கு இருந்தனர். மார்ச் 23ஆம் தேதி மோகன் ஒப்படைக்கப்பட்டபோது அவரது சகோதரரிடம் தொடர்பு கொண்டு மலேசிய விசாரணை அதிகாரியின் தொடர்பு எண் வழங்கப்பட்டது,” என்று போலிசார் தெரிவித்த     னர்.

கடந்த 2015 மார்ச் 21ஆம்தேதி மலேசிய போலிசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 

இதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒரு வீட்டில் போலிசார் கைது செய்தனர். அந்த வீட்டை மோகன் வாடகைக்கு எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிங்கப்பூர் போலிசாரை தொடர்புகொண்ட மலேசிய போலிசார் மோகனை கைது செய்ய உதவும்படி கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து மோகன் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அப்போது கொலை குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக மலேசிய நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணை வாசித்துக் காட்டப்பட்டது. 

இதன் பிறகு மலேசிய போலிசாரிடம் மோகன் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு மலேசிய போலிசார் திரு மோகனை விடுவித்துவிட்டனர்.