செயற்கை நுண்ணறிவில் நம்பிக்கை கூடும்

பொறுப்புணர்வுடன் நெறிமுறைக்கு உட்பட்ட வகையில் செயற்கை நுண்ணறிவு கையாளப்படலாம் என்பதன் தொடர்பில் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நம்பிக்கை கூடும் என்று குறிப்பிட்டார். 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 50வது உலகப் பொருளியல் கருத்தரங்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரு ஈஸ்வரன், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

சென்ற ஆண்டு நடைபெற்ற இதே கூட்டத்தின்போது, சீரான விளைவுகளைத் தரக்கூடியதாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாதிரிகள் அமைய வேண்டும் என்றும் அதில் குறைந்த அளவிலான பிழைகள் நிகழ வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து நேற்று அமைச்சர் ஈஸ்வரன் கூட்டத்தின்போது, அடுத்த கட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு நிர்வாகக் கட்டமைப்பு பற்றி அறிவித்தார்.

“செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் பயன்படுத்தும்போது அச்செயற்கை நுண்ணறிவை நம்ப முடியுமா  என்றும் கவலைகள் எழுகின்றன,” என்று குறிப்பிட்டார் திரு ஈஸ்வரன்.

இதனால் அமைப்புகளுக்குச் சரியான வழிகாட்டுதல் அளித்து நம்பிக்கையை உருவாக்குவதே இக்கட்டமைப்பின் நோக்கம் என்றார் அவர்.

கட்டமைப்பின் வழிகாட்டுதல்களை ‘கிராப்’, ‘டிபிஎஸ்’ வங்கி, ‘எச்எஸ்பிசி’ வங்கி எனக் குறைந்தது 15 நிறுவனங்கள் கடைப்பிடித்து வருவதாகவும் அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

பகுத்தறிதல், பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், கற்றல், திட்டமிடுதல், முன்னுரைத்தல் என மனிதனிடம் காணப்படும் பண்புகளைக் கொண்டு செயல்படும் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.