ஹவ்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 180 பேர் வெளியேற்றம்

ஹவ்காங்கில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் நேற்று அதிகாலை தீ மூண்டது.

புளோக் 5 புவாங்கோக் கிரீன் பகுதிக்கு காலை 5.50 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் வந்தபோது சுமார் 180 குடியிருப்பாளர்கள் அந்த இடத்தைவிட்டு சுயமாக வெளியேறிவிட்டனர்.

தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பில் இருவரை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட அவ்விருவரும் மறுத்துவிட்டனர்.

அந்த வீட்டின் படுக்கை அறையில் மின்சைக்கிள் ஒன்றின் மின்கலம் மின்னூட்டம் செய்யப்பட்டபோது தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தனிநபர் நடமாட்ட சாதனங்கள் அல்லது மின்சைக்கிள்களை மின்னூட்டம் செய்வதால் ஏற்படும் தீச்சம்பவங்களை எப்படி தவிர்ப்பது என்பது குறித்த விவரங்களைக் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.