மனமுருக வைத்த ‘அரோகரா’ முழக்கம்

வழிநெடுக ஒலித்த ‘அரோகரா’ முழக்கத்தையும் தெய்வீக இசையையும் கேட்ட பக்தர்கள் அனைவரும் உள்ளமுருகி முருகப் பெருமானை வணங்கியபடியே தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

சிங்கப்பூரில் நோய்ப் பரவல் விழிப்புநிலைக் குறியீடு (டோர்ஸ்கான்) ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளபோதும் நேற்று தைப்பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர் கூட்டம் நிதானத்தைக் கடைப்பிடித்தது. அவர்களில் பெரும்பாலோர் முகக் கவசங்களை அணியவில்லை.

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் நுழைவுப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கணினியுடன் இணைக்கப்பட்ட வெப்பமானியின் மூலம் பக்தர்களின் அனைவரது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

அந்த ஆலயத்திலிருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வரை, வழியில் இருந்த சாலை வழிகாட்டிகளிடமும் மருத்துவ உதவி கூடாரங்களிலும் முகக்கவசங்களும் கைகளைச் சுத்தம் செய்யும் திரவமும் இருந்தன.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் வெளியே அமைக்கப்பட்டிருந்த காவடி ஏந்துபவர்களுக்கான கூடாரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவ உதவிக் கூடாரத்திற்கு வருமாறு அவ்வப்போது ஒலிபரப்பப்பட்ட அறிவிப்பும் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் நடப்பில் இருப்பதைப் பக்தர்களுக்கு நினைவுபடுத்தியது.

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தைப்பூச ஊர்வலத்தில் கலந்துகொண்டு, விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். இதுபோன்ற சூழல்களில் அவரவர் சுகாதாரத்தைப் பேணிக் காத்தல் முக்கியம் என திரு சண்முகம் வலியுறுத்தினார்.

இதுபோன்ற கூட்டங்களில் மக்கள் நெருக்கமாக இருந்தாலும் கிருமித்தொற்று குறித்த புரிந்துணர்வு அவர்களுக்கு உள்ளது என்றே கருதமுடியும் என அவர் சொன்னார்.

‘’ஊர்வலத்தில் இசைக் கருவிகளுக்கான வரவேற்பு ஓரளவு நன்றாக இருக்கிறது. ஊர்வலத்தின் போது வழியில் பல இடங்களிலும் இசையைக் கேட்க முடிகிறது. இதுவரையில் இது குறித்து எவரும் அதிருப்தி தெரிவிக்காத நிலையில் மக்கள் அனைவரும் மனநிறைவோடு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தைப்பூசத் திருவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் இதே கருத்தைப் பிரதிபலித்தார்.

‘டோர்ஸ்கான்’ எச்சரிக்கை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டாலும் பக்தர்களில் பெரும்பாலானோர் நிதானத்துடன் இருந்ததாக திரு சான் குறிப்பிட்டார்.

வாழ்க்கை உடனே நிலைகுத்தி விடாது எனக் கூறிய திரு சான், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாம் வழக்கம்போல் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றார்.

தைப்பூசத் திருவிழாவில் இந்து சமயத்தினர் மட்டுமின்றி மற்ற சமயத்தினரும் தொண்டூழியர்களாகப் பங்காற்றியது கண்டு அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

அத்துடன், தைப்பூசத் திருவிழாவில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு, சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்குவதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பக்தர்களின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்க வெப்பமானிகள், ஊர்வல வழியின் பல இடங்களில் கிருமிநாசினித் திரவம் கொண்டு கைகளைச் சுத்தம் செய்யும் இடங்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் செய்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பெரிதும் வரவேற்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். ஆரஞ்சு விழிப்புநிலையைப் புரிந்துகொண்டு, பக்தர்களும் அதற்கு ஒத்துழைத்ததைத் தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றுக் காலை 7.30 மணிக்கு காவடி ஏந்தத் தொடங்கிய 20 வயதான உலகநாதன் ரி‌ஷிவரனுக்கு இது ஒரு சுவாரசியமான அனுபவம்.

“பக்திப் பாடல்கள் ஊர்வலத்தின் பல இடங்களில் ஒலித்தன. நேரடி இசை வழங்கும் இடங்களில் காவடி ஏந்தும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் போதிய நேரம் ஒதுக்கப்பட்டது, களைப்பை உணராது நேர்த்திக்கடனைச் செலுத்த உதவியது,” என்றார் அந்த முழு நேர தேசிய சேவையாளர்.

தமக்கு இது ஒரு புதிய அனுபவம் என்றாலும் தமது குடும்பத்தினருக்கு இது வழக்கமான ஒன்று தான் என்றார் அவர்.

தம்முடைய 67 வயது தந்தை, 29 வயது அண்ணனைத் தொடர்ந்து திரு ரிஷிவரனும் காவடி ஏந்தத் தொடங்கியுள்ளார்.

இளம் பருவத்தில் ‘ஓ’ நிலைத் தேர்வில் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் காவடி ஏந்தினார் திரு கோவிந்தசாமி பரமசிவன், 50. வேண்டுதல் நிறைவேறி விட்டபோதும் 30 ஆண்டுகளாக காவடி ஏந்துவதைத் தொடர்கிறார் மருந்தாக்கத் துறையில் தொழில்நுட்பராகப் பணியாற்றும் அவர்.

இன்று போதிய வசதிகளுடன் தொண்டூழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் தைப்பூச ஊர்வலம் சுமுகமாக நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்.

காவடி ஏந்துபவர்களும் பால் குடம் எடுப்பவர்களும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்குள் நுழைய தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டது பாராட்டுக்குரியது என்றார் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய அரசாங்க ஊழியர் குமாரி கி.ஸ்ரீபிரியா, 38.

‘’கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டபோது, ஏற்பாட்டாளர்கள் தயாராக இருந்தனர் என்பதை உணர முடிந்தது. இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத்தளத்திலும் இது தொடர்பான தகவல்களை அறிந்துகொண்டேன். உடல்நலம் சரியில்லை என்றால் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்ற சமூகப் பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது என்று நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார் இவர்.

ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களின் முயற்சியில் இந்த மாபெரும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடந்தேறியது.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் அருகே கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தண்ணீர் போத்தல்களை விநியோகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று வரும் மாணவி வி.ஷமித்ரா, 23.

இரு நாட்களாக இவ்விழாவில் கலந்துகொண்ட இவர், தமது சுகாதாரத்தைப் பேணிக்காப்பதற்காக கைகளைச் சுத்தம் செய்யும் திரவத்தைப் பயன்படுத்தி வருவதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!