சுடச் சுடச் செய்திகள்

கல்வி அமைச்சர்: இப்போதைக்கு பள்ளிகளை மூட திட்டம் இல்லை

கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், இப்போதைக்குப் பள்ளிகளை மூடும் திட்டமில்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார்.

இது, சாதக பாதகங்களுடன் கூடிய ஒரு பெரிய, கடினமான முடிவு என திரு ஓங் சொன்னார்.

"என் பிள்ளையை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம். அவனை நானே பார்த்துக்கொள்ளலாம். அப்போது அவன் பாதுகாப்பாக இருப்பதாக நான் உணரலாம் என்று பெற்றோர்கள் பலரும் நினைப்பது சாதகமான அம்சம்,” என்றார் அமைச்சர்.

அதே வேளையில், பள்ளிகளை மூடுவதில் மூன்று பாதகமான அம்சங்களும் உண்டு என அவர் குறிப்பிட்டார்.

முதலாவதாக, வீட்டிலும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் மூலம் கிருமி வெளியிலிருந்து வீட்டிற்குள் வரலாம். மாறாக, அடிக்கடி சுத்தம் செய்தும் கிருமி நாசினி தெளித்தும் பள்ளிச் சூழல் பாதுகாப்பானதாக வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக, பள்ளிகளை மூடினால் பிள்ளைகள் எல்லா நேரமும் வீட்டிலேயே இருப்பர் என்று சொல்வதற்கில்லை என்றார் திரு ஓங்.

“வெளியில் சூரியக் கதிர்கள் உடல் மீது படும் பட்சத்தில் அவர்களின் மீட்சித்திறனும் நோய் எதிர்ப்பாற்றலும் கூடலாம். அதே நேரத்தில், பொது இடங்களுக்குச் செல்லும்போது மற்றவர்கள் மூலம் கிருமி தொற்ற வாய்ப்புள்ளது. பள்ளிகளில் இருந்தால் அடிக்கடி கைகளைக் கழுவும்படியும் கைகளால் முகத்தைத் தொட வேண்டாம் என்றும் ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டே இருப்பர்,” என்று அவர் விளக்கினார்.

மூன்றாவது பாதக அம்சம்தான் அடிக்கடி குறைத்து மதிப்பிடப்பட்டு விடுகிறது என்றார் அவர்.

“பள்ளிகளை மூடுவது பல பெற்றோர்களுக்கு, மாணவர்களுக்குப் பெரிய இடையூறாக அமைந்துவிடலாம். தொடக்கத்தில் நாம் பாதுகாப்பாக இருப்பதுபோலத் தோன்றினாலும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும்,” என்று அமைச்சர் சுட்டினார்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கும் என்றும் பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டால் அது ஒருவித அச்சத்தையும் விரக்தியையும் ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர் சொன்னார்.

“நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்போம். இப்போதைக்கு பள்ளிகள் மூடப்படாது. ஆயினும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார் திரு ஓங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon