அமைச்சர் ஈஸ்வரன்: வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வை சிங்கப்பூர் கவனித்துக் கொள்ளும்

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் பற்பல முயற்சிகள் எடுத்து வரும் வேளையில், இங்கு வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரம் கவனித்துக் கொள்ளப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் பாப்பான் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஊழியர்களுடன் சுமார் 30 நிமிடம் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசனார். சிங்கப்பூரில் தங்கியிருப்பவர்களுடன் வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் கூறினார்.

“இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களின் அக்கறைகளைக் கவனிக்க நாங்கள் எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்,” என்றும் திரு ஈஸ்வரன் உறுதியளித்தார்.

நாளை முதல் மே 4ஆம் தேதி வரை பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் என்பதால் ஊழியர்களில் சிலருக்குத் தற்காலிகமாக வேலையில்லாமல் இருக்கக்கூடும். அதனால் ஊழியர்கள் கவலையடைந்திருப்பார்கள் என்பதால், இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.