மின்மயச் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள தொழில்நுட்பத்தை நாடும் மூத்த ஊழியர்கள்

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் வாழ்க்கை மற்றும் வேலைச் சூழலுக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளது. எண்ணற்ற நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற நிலையில் மூத்த ஊழியர்கள் தங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் புதிய சூழலைச் சமாளிக்கவும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள தொழில்நுட்பத்தை நாடுகின்றனர்.

அவ்வகையில் மூத்த ஊழியர்களும் மற்றொரு துறையில் வேலையை மாற்ற விரும்புவோரும் இப்போதுள்ள சூழ்நிலையைச் சமாளிக்க தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து பலர் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தங்களை தொழில்நுட்ப ரீதியாக திறன்பெற்றவர்களாகத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சிலர் ஒருபடி மேலே சென்று தங்களைக் கணினித் துறைக்கு ஆயத்தப்படுத்திக் கொள் கின்றனர். அவ்வகையில் பல ஆண்டுகளாக கல்வியாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பெர்னர்ட் சியு, 45, தொடர்ச்சியாக கணினி சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கடைசியில் கணினித் துறைக்கு மாறி இப்போது கணினிப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கணினித் துறையின் தேவையின் உணர்ந்ததால் தான் கணினித்துறை பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றதாக அவர் கூறுகிறார்.

தொழில்நுட்பத்துறைக்கு மாறவிரும்புவோரைத் தயார்ப்படுத்தும் விதமாக ‘ஐஎம்டிஏ’ என்றழைக்கப்படும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின் மூலம் பல தொழில்நுட்பப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாற்றுத் துறைக்குச் செல்லவிரும்பும் 2,000க்கு மேற்பட்டோரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்குத் தயார்ப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவளிக்க ‘ஐஎம்டிஏ’ இலக்கு கொண்டுள்ளது.

என்டியுசி கற்றல் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், மின்னிலக்கமயமாக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த பயிற்சிகளில் பங்குபெற்று தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வோரின் எண் ணிக்கை ஆண்டுக்கு 18,000 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பாதி பேர் 40 வயது முதல் 60 வயதை எட்டியவர்கள் என்று கூறினார்.

“மின்னிலக்கமயமாகும் நிறுவனங்களுக்கேற்ப அதன் ஊழியர்களும் தங்கள் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டால் புதிய மாற்றங்களை எதிர்கொள்ள முடியும். நமது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் புதிய மாற்றங்கள் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்தால் நாம் பின்தங்கி விடுவோம்,” என்று என்டியுசி கற்றல் நிலையத்தின் தலைமை நிர்வாகி குவெக் கோக் குவோங் கூறினார்.