சுடச் சுடச் செய்திகள்

டெங்கி பாதிப்பால் இம்மாதம் நால்வர் உயிரிழப்பு

டெங்கியால் இம்மாதம் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இவ்வாண்டு இதுவரை 13,500க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

டெங்கி பாதிப்பால் இம்மாதம் உயிரிழந்தவர்களைச் சேர்த்து, இவ்வாண்டு 16 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்கள் 49 வயதுக்கும் 82 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உயிரிழந்தவர்களில் 14 பேர் கொசு இனப்பெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிந்தனர் அல்லது வசித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டெங்கித் தொற்று மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் ஒரு வாரத்தில் பதிவாகும் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுவிடுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரு வாரத்தில் பதிவாகும் டெங்கித் தொற்று எண்ணிக்கை 900ஐத் தாண்டியதில்லை. ஒரு வாரத்தில் 800 டெங்கிச் சம்பவங்களை காண்பதும் அரிதான ஒன்றாகவே இருந்து வந்தது.

ஆனால் தற்போதைய நிலை வேறு. நாள் ஒன்றுக்கு சுமார் 200 பேருக்குத் தொற்று என்ற எண்ணிக்கையில் டெங்கிச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

ஜூன் 20ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 1,374 டெங்கிச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. கடந்த வாரத்தின் ஐந்தரை நாட்களில் மட்டும் 1,138 சம்பவங்கள் பதிவாகின.

தற்போது 307 இடங்களில் கொசு இனப்பெருக்கம் அதிகமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 102 இடங்கள் அதிக அபாயம் கொண்டவையாக உள்ளன. இரண்டு வார காலத்தில் 150 மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் டெங்கியால் பாதிக்கப்பட்டிருந்தால் அது அதிக அபாயம் கொண்ட இடமாக குறிப்பிடப்படும். 

ஒன்பது டெங்கித் தொற்று குழுமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொத்தோங் பாசிர் வட்டாரத்தில் உள்ள உட்லீ பகுதியில் 215 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டதே ஆகப் பெரிய குழுமமாக இருக்கிறது.

தொடர்ந்து சில மாதங்களாக அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இவ்வாண்டு பெருவாரியாகப் பரவும் தொற்றுநோயாக டெங்கி உருவெடுக்கக்கூடும் என்று  தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon