பாதுகாப்பு இடைவெளி விதியை மீறிய வெளிநாட்டினர் 12 பேர் நாடுகடத்தல்

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறியதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 12 பேர் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் ஆண்கள் ஒன்பது பேர், பெண்கள் மூவர் என்றும் அவர்கள் அனைவரும் 20 முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும்  போலிஸ் தெரிவித்தது.அந்த 12 பேரில் பத்துப் பேர் இந்தியர்கள்; ஒருவர் மலேசியர், இன்னொருவர் சீனர்.

வேலை அனுமதி அட்டை அல்லது மாணவர் விசாவில் இருந்த அந்தப் பத்து இந்தியர்களும், கடந்த மே 5ஆம் தேதி விதிகளை மீறி ஒன்றுகூடியபோது பிடிபட்டனர். கிம் கியட் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த ஆடவர் இருவரும் பெண் ஒருவரும் மற்ற எழுவரைத் தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

தகுந்த காரணமின்றி அவர்களை வீட்டினுள் அனுமதித்ததாக நவ்தீப் சிங், 20, சஜன்தீப் சிங், 21, அவினாஷ் கோர், 27, ஆகிய மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை மீறியதாக வாசீம் அக்ரம், 33, முகம்மது இம்ரான் பாஷா, 26, அர்பித் குமார், 20, விஜய் குமார், 20, கரம்ஜீத் சிங், 30, சர்மா லுகேஷ், 21, புல்லார் ஜஸ்தீனா, 23, ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.அந்தப் பத்துப் பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் $2,000 முதல் $4,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது.அத்துடன், அவர்களின் நுழைவு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். இனிமேல் சிங்கப்பூருக்கு வரவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, வேலை அனுமதிச்சீட்டில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அர்வினிஷ் என். ராமகிருஷ்ணன், 23, என்ற மலேசியர், மது அருந்துவதற்காகக் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சக நாட்டவர் ஒருவரைத் தன் வீட்டிற்கு  அழைத்தார்.அதன்பின், அந்நண்பரை அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக அர்வினிஷ் அவரைத் தன் மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். 

அர்வினிஷ் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, கட்டுப்பாடுகளை மீறி வீட்டைவிட்டு வெளியே சென்றது, ஒன்றுகூடியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், கடந்த மாதம் 5ஆம் தேதி நாடுகடத்தப்பட்ட அவர், இனி சிங்கப்பூருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜாலான் கெமமானில் உள்ள ஒரு கொண்டோமினிய வீட்டில், தன்னுடன் வசிக்காத ஆடவர் ஒருவருக்கு உடற்பிடிப்பு, பாலியல் சேவைகள் வழங்கிய குற்றத்திற்காக செங் ஃபெங்ஸாவ் என்ற 37 வயது சீனப் பெண்ணும் நாடுகடத்தப்பட்டு, இனிமேல் இங்கு வரத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, நூறு வெள்ளிக்காக அந்தச் சேவைகளை வழங்கிய செங்குக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது.