பல்கலைக்கழக மாணவர்களுக்கு மெய்நிகர் அறிமுக நிகழ்ச்சிகள்

கொவிட்-19 காரணமாக, சிங்கப்பூரில் செயல்படும் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் மெய்நிகர் வடிவில் நடத்துகின்றன.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை இத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் சுமார் 1,900 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

இப்போது அங்கு படிக்கும் 200 மாணவர்கள், 30 ஏற்பாட்டாளர்கள், 20 பயிற்சியாளர்கள் என பலரும் அதில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

முன்னாள் கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் அந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில விளையாட்டுகளில் பங்கெடுத்துக்கொண்டு மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் தன்னுடைய 2,800 புதிய மாணவர்களுக்காக ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை ஒரு வார கால அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறது.

அந்தக் கழகத்தின் ஆறு வளாகங்களில் ஒவ்வொன்றையும் முப்பரிமாண வடிவில் காட்டும் மெய்நிகர் உலாவும் ஸூம் செயலி மூலம் பல்கலைக்கழகப் பேராளர்களுடன் புதிய மாணவர்கள் தொடர்புகொண்டு பல விவரங்களையும் கேட்டறிவது போன்ற நடவடிக்கை களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் புதிய மாணவர்களுக்காக ஜூலை மாதம் இதேபோன்ற அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் நீச்சல், திடல்தட மற்றும் டென்னிஸ் விளையாட்டுக் குழுக்களுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சி போன்ற பலவும் இடம்பெற்றன.

இந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையம் வழி நடந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிமுக நிகழ்ச்சி ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை இணையம் வழி நடக்கிறது.

நன்யாங் தொழிட்நுட்பப் பல்கலைக்கழகம் இந்த மாதம் தனது புதிய 6,000 மாணவர்களுக்காக 40க்கும் மேற்பட்ட இணைய அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இதனிடையே, சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் மட்டும் செப்டம்பர் 10 முதல் 11 வரை நேரடி அறிமுக நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுகிறது. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுக்களுக்குள் உடையாடல்கள் தவிர்க்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் கூறியது.